மழையால் பாதிப்பிற்குள்ளான விவசாயிகள் நிவாரணத்திற்கு... காத்திருப்பு! : 12,000 ஏக்கர் அழுகிய நெற்பயிர்களால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

பொன்னேரி:மீஞ்சூர், சோழவரம் ஒன்றியங்களில், தொடர் மழையால், விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீர் வடியாமல், 12,000 ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் தலைசாய்ந்து கிடக்கின்றன. நீண்ட நாட்களாக தண்ணீரில் விழுந்து கிடப்பதால், அவை அழுகி பாழாகி வருகின்றன. அவற்றை காப்பாற்ற முடியாமல், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதால், அரசின் நிவாரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர், சோழவரம் ஒன்றியங்களில், 45,000 ஏக்கர் பரப்பில், சம்பா பருவத்திற்கு நெல் பயிரிடப்பட்டு உள்ளது. இதில், பொன்னேரி, திருப்பாலைவனம், கோளூர், காட்டூர் ஆகிய குறுவட்டங்களில் உள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உவர்ப்பாக இருப்பதால், பருவ மழையை நம்பி ஆண்டுக்கு ஒருமுறை சம்பா பருவத்தின்போது மட்டும் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஆண்டு பயிரிடப்பட்டிருந்தவை, சீரான இடைவெளியில் மழை பெய்து வந்ததால், நெற்பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தன.

இந்நிலையில், கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால், விவசாய நிலங்களில், மழைநீர் தேங்கியது.

மழைவிட்டு, 10 - 15 நாட்கள் ஆன நிலையில், இதுவரை விவசாய நிலங்களில், மழைநீர் வடியாத நிலையில், நெற்பயிர்கள் பாதித்து உள்ளன.

பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட திருப்பாலைவனம், கோளூர், காட்டூர், பனப்பாக்கம், புதுச்சேரிமேடு, மடிமைகண்டிகை, இலுப்பாக்கம், தேவம்பட்டு, கங்காணிமேடு, பெரியகரும்பூர், சிருளப்பாக்கம், பெரும்பேடு என, பல்வேறு கிராமங்களில், 12,000 ஏக்கர் நெற்பயிர்கள் வடியாத மழைநீரில் விழுந்து கிடக்கின்றன.

அவை, நீண்டநாள் மழைநீரில் தேங்கியதால், தலை சாய்ந்தன. நெல்மணிகளில் முளைப்பு ஏற்பட்டும், பயிர்கள் அழுகியும் பாழாகி வருகின்றன.

உழவு, நடவு, மருந்தினங்கள் என, ஒரு ஏக்கருக்கு, 15,000 - 18,000 ரூபாய் வரை செலவிட்டு, உரிய முறையில் பராமரித்து வளர்த்து, அடுத்த சில தினங்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில், அவற்றை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

ஒரு சில விவசாயிகள் சாய்ந்த நெற்பயிர்களை நேர் நிறுத்தி ஒன்றுடன் ஒன்று சேர்த்து கட்டு போட்டு வைத்து உள்ளனர். இது எந்த அளவிற்கு பயன்தரும் என, தெரியாது எனவும் அவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பாலான கிராமங்களில் ஒவ்வொரு விவசாயியின் நிலத்திலும் இந்த பாதிப்புகள் இருக்கின்றன.

பாதிப்புகள் குறித்து வேளாண் துறையினர் ஒவ்வொரு கிராமத்திலும், முழுமையாக ஆய்வு செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கினறனர்.

இது குறித்து வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோளூர், திருப்பாலைவனம், பொன்னேரி ஆகிய குறுவட்டங்களில் பாதிப்புகள் அதிகமாக இருக்கின்றன.

பாதிப்பிற்கு உள்ளான விவசாய நிலங்களின் சிட்டா, அடங்கல் விபரங்கள் பெறப்பட்டு வருகின்றன. கணக்கெடுப்பு பணிகள் ஒரிரு நாளில் முடியும். அதன் பின், விபரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி, உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பயிர் காப்பீடு பெற்று தர வேண்டும்

கடந்த 2023ல், ஒரே முறை கனமழை பெய்தது. அடுத்த வந்த நாட்களில் மழைநீர் வடிந்து நெற்பயிர்கள் பாதிப்பில் இருந்து மீண்டன. இந்த முறை நவம்பர், டிசம்பர் மாதங்களில் விட்டுவிட்டு மழை பெய்தபடி இருந்தது. இதனால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கிய நிலையிலேயே இருக்கிறது.

இனி, இவற்றை காப்பாற்ற முடியாது. அறுவடை செய்தால், அறுவடை கூலிக்குகூட மகசூல் இருக்காது. ஒவ்வொரு விவசாயிக்கும், 20,000 - 25,000 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். இந்த ஒரு பருவ விவசாயத்தை நம்பியே ஆண்டு முழுதும் எங்கள் வாழ்வாதாரம் இருக்கிறது. அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு பெற்று தருவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.இ. ஆனந்தன்

விவசாயி,

கோளூர் கிராமம், பொன்னேரி.

Advertisement