கோவில், சுற்றுலாத்தலங்களில் குவிந்த மக்கள் செங்கை மாவட்டத்தில் புத்தாண்டு விமரிசை
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கோவில்கள், சர்ச், சுற்றுலாத்தலங்கள், விடுதிகளில் குவிந்த பொதுமக்கள், ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
2025 ஆங்கில புத்தாண்டு, நேற்று துவங்கிய நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொண்டாட்டம் களைகட்டியது. முக்கிய சுற்றுலா இடமான மாமல்லபுரத்தில் குவிந்த பொதுமக்கள் கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்டவற்றை ரசித்தனர்.
இங்குள்ள விடுதிகளில் நள்ளிரவில் வரவேற்பு கொண்டாட்டமும், பகலில் பயணியர் சுற்றுலாவும் களைகட்டியது.
நேற்று, காலை 10:00 மணியிலிருந்தே குடும்பத்தினர், நண்பர்கள், தனிநபர் என பயணியர் திரள துவங்கினர். சிற்பங்கள், கடற்கரை ஆகிய பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.
புத்தாண்டை முன்னிட்டு, செய்யூர் அருகே, முதலியார் குப்பம் 'போட் ஹவுசிலும் சுற்றுலாப் பயணியர் குவிந்தனர்.செய்யூர், ஜன. 2-
நேற்று 500க்கும் மேற்ப்பட்டோர் இங்கு வந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், நேற்று, 3,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணியர் வந்து, பறவைகளை ரசித்தனர்.
* கோவில்களில் சிறப்பு பூஜை
மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் நேற்று, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, காலை 3:30 மணிக்கு நடைதிறந்து சிறப்பு பூஜைகள் நடந்தன.
இங்குள்ள மல்லிகேஸ்வரர் கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர், கடம்பாடியில் பாலாலயத்தில் உள்ள மாரி சின்னம்மன், கல்பாக்கம் நகரியம் ஏகாம்பரேஸ்வரர், சதுரங்கப்பட்டினம் திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர் மற்றும் மலைமண்டல பெருமாள், கூவத்துார் திருவாலீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடந்து, பக்தர்கள் வழிபட்டனர்.
மதுராந்தகம் அருகே உள்ள தென்திருப்பதி என அழைக்கப்படும் திருமலை வையாவூர் அலமேலு மங்கை சமேதா ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், புத்தாண்டில் செவ்வாடை பக்தர்கள் குவிந்தனர். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, மேலதாளங்கள் ஒலிக்க, மங்கல இடையுடன் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில் நேற்று, புத்தாண்டை ஒட்டி பக்தர்கள் குவிந்ததால், ஓ.எம்.ஆர்., சாலை, மாடவீதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
சாதாரண வரிசை மற்றும் சிறப்பு கட்டண வரிசையிலும் பக்தர்கள் இரண்டு மணி நேரத்திற்கு காத்திருந்து, சுவாமியை தரிசித்தனர். கோவில் நடை அதிகாலை 2:30 மணியிலிருந்து, நாள் முழுதும் திறந்திருந்தது.
அதேபோல் நெல்லிக்குப்பம் வேண்டவராசி அம்மன் கோவில், கொளத்துார் கல்யாண ரங்கநாதர் கோவில், புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் கோவில், செம்பாக்கம் பாலா திரிபுர சுந்தரி, ஜம்புகேஸ்வரர் கோவில்களிலும் புத்தாண்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது.
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரத்தில் உள்ள நந்தீஸ்வரர் கோவில், ஊரப்பாக்கத்தில் உள்ள ஊரணீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருப்போரூர் துாய ஜார்ஜ் சர்ச், கோவளம் கார்மேல் மாதா சர்ச் உள்ளிட்ட சர்ச்களிலும், புத்தாண்டு வழிபாடு நடந்தது.
- நமது நிருபர் குழு-