சுகாதார நிலையத்திற்கு காவலாளி நியமிக்க கோரிக்கை
மதுராந்தகம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, இரவு நேர காவலாளியை பணியமர்த்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம், ஞானகிரீஸ்வரன்பேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
இங்கு நாள்தோறும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகள் மற்றும் கர்ப்பிணியர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரு மருத்துவர் மற்றும் பெண் செவிலியர் இங்கு பணியில் உள்ளனர்.தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ளதால், இரவு நேரங்களில் மூன்றாம் பாலினத்தவர்கள் சமூக விரோத செயல்களுக்கு, மருத்துவமனை வளாகப் பகுதியை பயன்படுத்துவதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயில் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
பெண் செவிலியர்கள் இரவு நேரங்களில் பணியில் உள்ளதால், இரவு நேர காவலாளியை பணியமர்த்தி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.