சேலத்தில் பூண்டு விலை கிலோவுக்கு ரூ.100 சரிவு
சேலத்தில் பூண்டு விலை கிலோவுக்கு ரூ.100 சரிவு
சேலம், ஜன. 4--
மத்திய பிரதேசம், ஹிமாச்சல், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் அதிகளவு பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. அங்கு அறுவடை செய்யப்பட்டு தமிழகத்தின் சேலம் உள்பட பல்வேறு மாவட்ட மார்க்கெட்டுகளுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது சேலம், செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட்டுக்கு, பழைய பூண்டு வரத்து மட்டுமின்றி விலையும் குறைய தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பூண்டு மொத்த வியாபாரிகள் கூறியதாவது:
பூண்டு அறுவடை சீசன், ஜனவரி, 2ம் வாரம் தொடங்கி மார்ச் வரை இருக்கும். குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட், லீபஜாருக்கு, பொங்கல் பண்டிகை முடிந்த பின், புது பூண்டு வரத்து தொடங்கிவிடும். இருப்பில் உள்ள பழைய பூண்டில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும். இதனால் சொத்தை ஏற்படும். வியாபாரிகள் வாங்குவதை குறைத்து விடுவர்.
கடந்த ஆண்டு வடமாநிலங்களில் மழையால் பூண்டு அறுவடை பாதிக்கப்பட்டு, தினமும், 100 டன் வரும் இடத்துக்கு, படிப்படியாக, 20 டன்னாக வரத்து சரிந்தது. இதனால் எப்போதும் இல்லாதபடி, ஹிமாச்சல் மலை பூண்டு கிலோ, 450 ரூபாய் வரை உயர்ந்தது.
கடந்த மாதம் ஹிமாச்சல் பூண்டு சில்லரை விலையில் கிலோ, 400க்கு விற்றது, இந்த மாதம் தரத்துக்கு ஏற்ப, 100 வரை விலை குறைந்து, 300 முதல், 340 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதேபோல் கிலோ நாட்டு பூண்டு, 340ல் இருந்து, 280 ரூபாய்; லட்டு ரகம், 320ல் இருந்து, 220; பாம் ரகம், 350ல் இருந்து, 250; எக்ஸ்ட்ரா பாம் ரகம், 380ல் இருந்து, 280; நடுத்தர ரகம், 290ல் இருந்து, 200 ரூபாய் என, விலை குறைந்து விற்கப்படுகிறது. புது பூண்டு சீசன் தொடங்கி, வரத்து சீராக இருக்கும்போது, இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.