நடந்து சென்ற மூதாட்டியிடம் கவரிங் செயினை பறித்த ஆசாமி
வானூர்: வானூர் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம், தங்க செயின் என நினைத்து, கவரிங் செயினை பறித்து சென்ற ஆசாமி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானூர் அடுத்த இரும்பை பள்ளத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி கிருஷ்ணவேணி, 70; இவர் இரும்பை மகாகாளேஸ்வரர் கோவிலில் துப்புரவு பணி செய்து வருகிறார்.
நேற்று காலை 6;00 மணிக்கு, கிருஷ்ணவேணி வீட்டில் இருந்து கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த ஆசாமி, கிருஷ்ணவேணியை வழிமறித்து, ஆலங்குப்பம் கிராமத்திற்கு எப்படி செல்ல வேண்டும் எனக்கேட்டுள்ளார்.
அதற்கு நின்று பதிலளித்த, மூதாட்டியின் வாயில் துணியை அடைத்து விட்டு, கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து சென்றார். இதை பார்த்த பொது மக்கள், அங்கு ஓடி வருவதற்குள், அந்த ஆசாமி தப்பிச்சென்றார்.
அதில், கிருஷ்ணவேணி அணிந்திருந்த செயின் கவரிங் செயின் என்று தெரியவந்தது. பைக்கில் வந்த ஆசாமி, தங்க செயின் என நினைத்து, கவரிங் செயினை பறித்து சென்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.