மணிமுக்தா பாசன வாய்க்காலில் இருந்து ஏரிக்கு மின்மோட்டார் மூலம் நீரேற்றம் கலெக்டர், எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரிஷிவந்தியம்; சூளாங்குறிச்சியில் மணிமுக்தா அணை பாசன வாய்க்காலில் இருந்து ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மின்மோட்டாரை கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையிலிருந்து பாசன வாய்கால் வழியாக, விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பாசன வசதிக்கு பயன்படுத்தப்பட்ட நீர் போக உபரி நீரை ஏரிக்கு கொண்டு செல்ல வழிவகை செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி மணிமுக்தா ஆறு பாசன வாய்க்காலில் இருந்து சூளாங்குறிச்சி ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில், ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய மின்மோட்டார் மற்றும் பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சூளாங்குறிச்சி ஏரிக்கு மின்மோட்டார் மூலம் தண்ணீர் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் தலைமை தாங்கி மின் மோட்டாரை இயக்கி வைத்தனர். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், சேர்மன் வடிவுக்கரசி சாமி சுப்ரமணியன், பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் கோமதி சுரேஷ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ராஜி, ஒன்றிய கவுன்சிலர் சுசீலா பாண்டுரங்கன், வழக்கறிஞர் ரஞ்சித், ஊராட்சி தலைவர் கிருஷ்ணபிரசாத், நிர்வாகிகள் சரவணன், சிவமுருகன், மகேஷ், வி.ஏ.ஓ., பாக்கியராஜ், ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.