சிறப்பு தொகுப்பு பொருட்கள் விற்பனை; இணைப்பதிவாளர் துவக்கி வைப்பு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் சிறப்பு பொங்கல் தொகுப்பு பொருட்கள் விற்பனையை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். பொது விநியோக திட்ட துணை பதிவாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குறைந்த விலையில் மூன்று வகையான சிறப்பு தொகுப்பு பொருட்கள் விற்பனையை தமிழக அரசு அறிமுகம் செய்தது.

இதில், மஞ்சள் துாள், சர்க்கரை, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசிப்பருப்பு, புளி, பொட்டுக்கடலை உள்ளிட்ட 20 வகையான பொருட்களை கொண்ட ரூ.499 மதிப்பிலான சிறப்பு பொங்கல் தொகுப்பு பொருட்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி சரக துணை பதிவாளர் சுகுந்தலதா, செயலாட்சியர் செந்தில் கலந்து கொண்டனர்.

Advertisement