பொங்கல் மண் பானைகள் தயாரிப்பு பணி தீவிரம்
கடலுார், : கடலுாரில் பொங்கலை முன்னிட்டு, மண் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பொங்கல் அன்று புதுப்பானைகளில் பொங்கலிட்டு சூரியனை வழிபடுவது வழக்கம். பொங்கலுக்கு தேவையான மண் பானைகள், சட்டிகளை செய்யும் தொழிலாளர்கள், தற்போது கிராமங்களில் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.
கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பம், ஆலப்பாக்கம், பெரியப்பட்டு, வசந்தராயன்பாளையம், சாவடி, வண்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பூண்டியாங்குப்பத்தை சேர்ந்த பூராசாமி கூறுகையில், கடந்த 40ஆண்டுகளாக மண்பாண்டங்கள் தொழில் செய்து வருகிறேன்.
மண் பானைகள், சட்டிகள் வாங்கிப் பயன்படுத்துவது தற்போது குறைந்து வருகிறது.
பொங்கல் அன்று புதுப்பானையில் பொங்கல் வைக்கவும், கார்த்திகை தீபத்தன்று புது மண் விளக்கு தீபம் ஏற்றவும், திருமணம் மற்றும் துக்க காரியங்களுக்கு புதிய மண் சட்டி, பானைகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கான தேவையை பூர்த்தி செய்ய, குறைந்த அளவில் செய்து வருகிறோம். மூலப்பொருளான களிமண்ணை எடுத்துவருவதற்கு எளிதில் அனுமதி கிடைப்பதில்லை. இந்த தொழில் நலிவடைவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றனர்.