புதுச்சேரியின் பொருளாதாரத்திற்கு உயிர்நாடியாக இருந்த
புதுச்சேரி கடற்கரை சாலை டூப்ளேக்ஸ் சிலையையொட்டி, சீகல்ஸ் ஓட்டல் பின்புறம், தென் கிழக்கு கடலில் ஆக்ரோஷமாக கொந்தளிக்கும் அலைகளுக்கு மத்தியில் சிமெண்ட் துாண்கள், இரும்பு கம்பிகள் வெளியே தெரிய எலும்பு கூடு போல் காணும் துறைமுகத்தை எவரும் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.
கடலில் புதையல்போல் மூழ்கி கிடைக்கும் அந்த பாலம் சுதந்திரத்திற்கு பிறகு தான் கட்டப்பட்டது. இந்த துறைமுகம் கட்டும் பணி 1958ல் துவங்கி,1962ம் ஆண்டு வரை நடந்தது. மொத்தம் 42 லட்சம் ரூபாய் செலவில் இந்த துறைமுகம் கட்டப்பட்டது. 1963ல் இருந்து செயல்பட துவங்கியது. இதனை அப்போதைய மத்திய கப்பல் போக்கு வரத்து துறை மந்திரி ராஜ்பகதுார் திறந்து வைத்தார்.
இத் துறைமுகம் வாயிலாக மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து பாமாயில், மரம், சீனாவில் இருந்து வேதிப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இங்கிருந்து மொலாசஸ் ஏற்றுமதி செய்யப்பட்டது. தினசரி 800 மெட்ரிக் டன் அளவுக்கு சரக்குகள் கையாளப்பட்டன.
கப்பல்களை சில மைல் துாரத்தில் நிறுத்திவிட்டு, சிறு விசைப்படகுகள் மூலம் சரக்குகள் இந்த துறைமுகத்தில் கொண்டுவரப்பட்டன. முதன் முதலில் பருத்தி கட்டுகளை கையாண்ட இந்த துறைமுகம் 1965ல் கனிம பொருட்களையும், 1966ல் உரங்களையும், 1980-82 வரை சிமெண்ட் மூட்டைகளையும் இறக்குமதி செய்து, புதுச்சேரி பொருளாதாரத்தை உயிர்பெற செய்தது.
2000ம் ஆண்டு வரை இந்த துறைமுகம் சுறுசுறுப்பாகவே இருந்தது. ஏற்றுமதியும் - இறக்குமதியும் பிற மாநிலங்களை பொறாமைப்பட வைத்தது. ஆனால், தனியார்மய கொள்கை இந்தியாவில் நுழைந்த பிறகு இந்த துறைமுகத்தின் வணிகத்தோடு விளையாடிவிட்டது.
படிபடியாக ஏற்றுமதி - இறக்குமதி சரிந்து, செயல்படாமல் முடங்கியது. மற்றொரு பக்கம் துறைமுக பாலமும், கடல் அலைகளில் ஆக்ரோஷத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் சிதிலமடைய, சரக்கு ஏற்றுமதி, இறக்குமதியை சுத்தமாக துறைமுக துறையை கைவிட்டது.
இந்த பழைய துறைமுக பாலத்தில் பொதுமக்கள் காலையும், மாலையும் நடைபயிற்சி செய்து வந்தனர். சுற்றுலா பயணிகள் பாலத்தில் நடந்து சென்று கடல் அழகை கண்டுகளித்து வந்தனர்.
மேலும், இந்த பாலத்தில் அவ்வப்போது சினிமா படப்பிடிப்புகளும் நடந்து வந்தது.
கடந்த 2022 மார்ச் 6ம் தேதி கடல் சீற்றத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் இடிந்துபோய் உள்வாங்கியது. கடல் அலைகளோடு உறவாடியாக துறைமுகம், அதே கடலில் மூழ்கி சங்கமிக்க தற்போது தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது.