மாணவர்களுக்கு தொல்லை தலைமையாசிரியர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் திரு.வி.க., நகராட்சி மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அருகில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் ராஜேஷ் 39, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

ராஜபாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ் . இவர் கிருஷ்ணகிரியில் பணியாற்றி வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்துாரில் திரு.வி.,க, நகராட்சி துவக்கப்பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு, தலைமையாசிரியராக உள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மாணவர்களுக்கு கேக் வாங்கி கொடுத்துள்ளார். அதற்கு டிச. 25 ல் துவக்கப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த அருகேயுள்ள பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் இருவர், ஆசிரியர் ராஜேஷுக்கு நன்றி சொல்ல சென்ற போது, அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் கூறியுள்ளனர். மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள், டவுன் போலீசிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் மாணவர்களிடமும், தலைமையாசிரியர் ராஜேஷிடமும் விசாரித்தனர்.

பின்னர் ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜேஷை கைது செய்து, போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி சுதாகர் உத்தரவிட்டார். இதனையடுத்து விருதுநகர் சிறையில் ராஜேஷ் அடைக்கப்பட்டார்.

Advertisement