கண்ணாடி பாலம் திறப்பு திருவள்ளுவர் சிலைக்கு படகு ரத்து
நாகர்கோவில்:கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் இருந்து கண்ணாடி பாலம் வழியாக திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளுவர் சிலைக்கான படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இங்கு கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைத்து ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்தை டிச., 30 முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பின் ஜன.,4 முதல் சுற்றுலா பயணிகள் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்ணாடி பாலம் அமைக்கப்படுவதற்கு முன் பூம்புகார் போக்குவரத்து கழகப்படகு முதலில் விவேகானந்தர் பாறைக்கும், பின்னர் அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்கும் சென்று திரும்பும். தற்போது விவேகானந்தர் பாறைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கண்ணாடி பாலம் வழியாக திருவள்ளுவர் சிலைக்கு சென்று வருகின்றனர்.
இதனால் திருவள்ளுவர் சிலைக்கு பயணிகளை படகில் அழைத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை இல்லாததை கருத்தில் கொண்டு அங்கு படகு செல்வது ரத்து செய்யப்பட்டுள்ளது.
விவேகானந்தர் பாறையை பார்த்த பின் திருவள்ளுவர் சிலைக்கு சென்று திரும்பி விவேகானந்தர் பாறையில் இருந்தே பயணிகள் கரைக்கு திரும்புகின்றனர். இதனால் கூடுதல் சர்வீஸ் நடத்த முடியும் என்று பூம்புகார் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.