பாலியல் விவகாரத்தை மறைக்க முயற்சி: அண்ணாமலை

சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:

அண்ணா பல்கலையில் மாணவிக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லை விவகாரத்தில் தமிழக பா.ஜ., மகளிர் அணியினர், பா.ம.க.,வினர், அ.தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தியபோது, காவல் துறை வலுக்கட்டாயமாக அவர்களை கைதுசெய்தது.

ஆனால், உப்பு சப்பில்லாத கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விஷயத்தில், தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. அந்த ஆர்ப்பாட்டத்துக்கு மட்டும் எப்படி அனுமதி கொடுத்தனர்?

தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடப்பில் உள்ளது. கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி; எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என, அம்பேத்கர் சட்டம் இயற்றவில்லை.

கவர்னரை ஆபாசமாக சித்தரித்து, தி.மு.க.,வினர் போஸ்டர்ஒட்டியுள்ளனர். இதைகாவல் துறை வேடிக்கை பார்க்கிறது.

எங்களாலும் முதல்வர் ஸ்டாலினை ஆபாசமாக சித்தரித்து போஸ்டர் ஒட்ட முடியும். ஆனால், அந்தப் பதவிக்கென ஒருமரியாதை உள்ளதால் அமைதி காக்கிறோம்; தவிர்க்கிறோம்.

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தை மறைக்க, முதல்வர் ஸ்டாலின், கவர்னரை பயன்படுத்துகிறார். தி.மு.க.,வினர், கவர்னரை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement