'இல்லம் தேடி கல்வி' ஆசிரியர்கள் விடுவிப்பு

சென்னை:'இல்லம் தேடி கல்வி' திட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றிய ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்ட போது, குழந்தைகளின் கற்கும் திறன் பாதிக்காத வகையில், 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டத்தை தமிழக அரசு, 2021ல் அறிவித்தது.

இதன்படி, தன்னார்வலர்கள், தங்களின் வீடுகளுக்கே குழந்தைகளை அழைத்து வந்து கற்பித்தனர்.

துவக்கத்தில், 11,000 தன்னார்வலர்கள் இருந்த நிலையில் படிப்படியாக உயர்த்தப்பட்டு, 23,000 தன்னார்வலர்கள் வரை கற்பித்தல் பணியில் ஈடுபட்டனர்.

அவர்களை ஒருங்கிணைக்கும் வகையில், ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு ஆசிரியர் பணி அமர்த்தப்பட்டார்.

கொரோனா பரவல் குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கல்வியில் மிகவும் பின்தங்கிய பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு மட்டும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர்.

அந்த வகையில், வட்டார ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றிய ஆசிரியர்கள், அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு பள்ளிகளுக்கு திரும்பினர்.

தற்போது, அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களை மேம்படுத்தும் வகையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த ஆசிரியர்களையும் விடுவித்து, மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம், மாவட்ட அளவில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை செயல்படுத்த ஆர்வமும், ஈடுபாடும் உள்ள தன்னார்வலர் ஒருவரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கும்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அவருக்கு மாத மதிப்பூதியமாக, 12,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Advertisement