கடலில் கழிவு நீர் கலப்பு விவகாரம் கலெக்டருக்கு தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை:மன்னார் வளைகுடா கடலில், கழிவுநீர் கலப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, ராமநாதபுரம் கலெக்டர், கீழக்கரை நகராட்சி ஆணையருக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில், 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், நேரடியாக மன்னார் வளைகுடா கடலில் பல இடங்களில், பல ஆண்டுகளாக விடப்படுகிறது.

இதனால், கீழக்கரை கடலில் தொடர் மாசு ஏற்பட்டு, அப்பகுதியில் வாழும் மீன்கள், ஆமைகள் போன்ற அரிய வகை உயினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. முத்து குளித்தல், அரிய வகை சங்கு சேகரித்தல் உள்ளிட்ட பல வகையான கடல் தொழிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாக, கடந்த டிசம்பர் 30ம் தேதி, நம் நாளிதழில் செய்தி வெளியானது.

அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'கீழக்கரை நகராட்சி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மன்னார் வளைகுடா கடலில் கலந்து சுற்றுச்சூழலுக்கும், மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவது குறித்து, ராமநாதபுரம் கலெக்டர், கீழக்கரை நகராட்சி ஆணையர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

வழக்கு விசாரணையை, பிப்ரவரி, 21க்கு தள்ளிவைத்தனர்.


2025ல் முதல் வழக்காக 'தினமலர்' செய்தி



மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக, நம் நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில், தீர்ப்பாயம் தாமாக முன்வந்து, இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. 2025ல் தீர்ப்பாயத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இது.

Advertisement