நிலுவை பத்திரங்களில் இருந்து ரூ.400 கோடி வருவாய் ஈட்ட முடிவு சிறப்பு இயக்கம் அறிவித்தது பதிவுத்துறை
சென்னை:மதிப்பு குறைபாடு போன்ற காரணங்களால், நிலுவையில் உள்ள பத்திரங்கள் தொடர்பான பிரச்னைகளை தீர்த்து, 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட,மார்ச், 31 வரை சிறப்பு இயக்கம் நடத்த பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
வீடு, மனை வாங்குவோர், அதற்கான கிரைய பத்திரத்தில் சொத்தின் மதிப்பை குறிப்பிட வேண்டும். இந்த மதிப்பு, அப்பகுதிக்கான வழிகாட்டி மதிப்புக்கு குறைவாக இருக்க கூடாது.
சில இடங்களில் வழிகாட்டி மதிப்பை விட குறைவான மதிப்பில், பத்திரங்களை மக்கள் தாக்கல் செய்கின்றனர். இத்தகைய பத்திரங்கள், துணை கலெக்டர் நிலையில் விசாரணைக்கு அனுப்பப்படும்.
அதில், நிர்ணயிக்கப்படும் புதிய மதிப்புகளை, பத்திரத்தின் உரிமையாளர் ஏற்காமல் மேல்முறையீடு செய்யலாம். பல இடங்களில், புதிய மதிப்புகளை ஏற்காமலும், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமலும் உள்ளனர்.
இதுகுறித்து, பதிவுத்துறை பிறப்பித்துள்ள உத்தரவு:
புதிய மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட போதிலும், அதில் வேறுபாட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்தாமல் உள்ளனர். இந்த வகையில், 2024 அக்., 31 நிலவரப்படி, 36,134 பத்திரங்கள் நிலுவையில் உள்ளன.
இந்த பத்திரங்கள் வாயிலாக, 400 கோடி ரூபாய் வருவாய், துறைக்கு வராமல் நிலுவையில் உள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி, பிரச்னையை முடிக்க வேண்டும்.
இப்பிரச்னையை தீர்க்க, சிறப்பு இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜனவரி, 1ல் துவங்கிய இந்த சிறப்பு இயக்கம், மார்ச் 31 வரை செயல்படுத்தப்படும்.
இதில் சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. அனைத்து சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள், டி.ஐ.ஜி.,க்கள் இதில் கவனமாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
l சிறப்பு இயக்கம் அறிவிப்பு குறித்து, அனைத்து பத்திரதாரர்களுக்கும் கடிதம் வாயிலாக தெரிவிக்க வேண்டும்
l அந்த கடிதம் திரும்ப வந்தால், சம்பந்தப்பட்ட சொத்து வேறு நபர்களுக்கு விற்கப்பட்டுள்ளதா என்பதை, வில்லங்க சான்று வாயிலாக அறிந்து, அவருக்கு கடிதம் அனுப்ப வேண்டும்
l சொத்து வேறு நபர்களுக்கு விற்கப்படாத நிலையில் கடிதம் திரும்ப வந்தால், பத்திரதாரரின் சரியான முகவரியை கண்டுபிடிக்க வேண்டும்
l பத்திரதாரரிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால், அந்த பத்திரத்தை எழுதிய ஆவண எழுத்தர் அல்லது வழக்கறிஞரிடம் இக்கடிதத்தை கொடுத்து, வேறுபாட்டு தொகையை செலுத்த அறிவுறுத்த வேண்டும்
l புதிய மதிப்பு நிர்ணயிக்கப்பட்டதால், வேறுபாட்டு தொகையை செலுத்த வேண்டிய நபர்களின் மொபைல் போன் எண்களை தொகுக்க வேண்டும்
l பத்திர எண், நிலுவை தொகை, வட்டி உள்ளிட்ட விபரங்களை, பதிவுத்துறை தலைமையகம் வாயிலாக பத்திரதாரரின் மொபைல் போனுக்கு தகவல் அனுப்ப வேண்டும்
l துணை கலெக்டர் வாயிலாக நிர்ணயிக்கப்பட்ட இந்த மதிப்பு அடிப்படையில், வேறுபாட்டு தொகையை வசூலிப்பதில், கிராம நிர்வாக அலுவலர்களையும் பயன்படுத்தலாம்
l வழக்கமான பத்திரப்பதிவு பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.