நீதிபதிகள் நியமனத்தில் பிரதிநிதித்துவம் தலைமை நீதிபதிக்கு பார் கவுன்சில் கடிதம்

சென்னை:'சென்னை உயர் நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் நியமனத்தில், அனைத்து சமூகத்துக்கும் உரிய, சமமான பிரதிநிதித்துவம் அளிப்பதோடு, திறமையான, நேர்மையான, சட்ட நிபுணத்துவம் வாய்ந்த வழக்கறிஞர்களை பரிந்துரைக்க வேண்டும்' என, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், துணைத் தலைவர் வி.கார்த்திகேயன் மற்றும் அகில இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதம்:

சென்னை உயர் நீதிமன்றத்தில், மொத்தம் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 75. தற்சமயம், 65 நீதிபதிகள் பணியில் உள்ளனர். இந்தாண்டு மட்டும் மேலும் பல நீதிபதிகள் பணி ஓய்வு பெறவுள்ளனர்.

இதனால், காலியிடங்கள் மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே காலியாக உள்ள, 10க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பணியிடங்களை விரைவாக நிரப்புவதுடன், இந்தாண்டு பணி ஓய்வு பெறவுள்ள நீதிபதிகளின் பணியிடங்களையும் விரைந்து நிரப்பும் வகையில், உயர் நீதிமன்றம் பரிந்துரைகளை விரைவுபடுத்த வேண்டும். அப்போது தான், மக்களுக்கான விரைவான மற்றும் தடையற்ற நீதி நிர்வாகத்தை நிலைநாட்ட முடியும்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளாக திறமையான, நேர்மையான, சட்ட நிபுணத்துவம் வாய்ந்த வழக்கறிஞர்களை பரிந்துரைக்கும் போது, அனைத்து சமூகத்துக்கும் உரிய, சமமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். சமூக பன்முகத்தன்மையை நிலைநாட்டும் வகையிலும், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement