நீதிமன்றத்திற்கு எடுத்து வந்த வெடிகுண்டு

சென்னை:சென்னை, பெரம்பூரில், கடந்தாண்டு ஜூலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

கொலையாளிகள் அவரை கொல்வதற்கு ஆயுதங்களையும், வெடிகுண்டு களையும் தயாராக வைத்திருந்தனர். ஆயுதங்களால் தாக்க முடியவில்லை எனில், வெடிகுண்டுகளை பயன்படுத்த திட்டமிட்டிருந்தனர். அந்த வெடிகுண்டுகளை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அவர்கள் கைமாற்றி உள்ளதாக, போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

இந்நிலையில், இவ்வழக்கில், பொன்னை பாலு, ரவுடி நாகேந்திரன் உள்ளிட்ட 28 பேரை, போலீசார் கைது செய்தனர். கைதான திருவேங்கடம் என்பவர், போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்டுள்ள அஞ்சலி, சிவா, பிரதீப், அஸ்வத்தாமன், அருள் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து, அவர்களின் உறவினர்கள் தரப்பில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் குமரேசன் ஆஜராகி, ''ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நபர்களில், 11 பேர் மட்டுமே குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, மனு தாக்கல் செய்துள்ளனர்.

''வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்படவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டத்துடன், இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கைதானவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது,'' என்றார். மனுதாரர்கள் தரப்பில் ஆஜராக வழக்கறிஞர்கள், வழக்கு விசாரணையை இழுத்தடிக்கும் வகையில், ஒவ்வொரு முறையும் மனுக்கள் மீதான விசாரணையை தள்ளிவைக்க கோருவதாகவும், இறுதி விசாரணை தேதியை நிர்ணயிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அதையடுத்து, 'உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதா, அதுகுறித்து தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதா, வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதா' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருவதாக, கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை, காவல் துறை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, இறுதி விசாரணையை ஜன.27ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Advertisement