100 கோடியை நெருங்குகிறது வாக்காளர் எண்ணிக்கை
புதுடில்லி
மஹாராஷ்டிரா தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதனால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஓட்டு மிஷின்கள் மீது குற்றஞ்சாட்டி, முறைகேடுகள் நடந்ததாக கூறின.
கடந்த காலங்களிலும் இதே போன்ற குற்றச்சாட்டுகள் தேர்தல் கமிஷன் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்து, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் டில்லியில் நேற்று கூறியதாவது:
ஓட்டளிப்பதில் நாங்கள் புதிய சாதனை ஏற்படுத்தி உள்ளோம். பெண்கள் பங்கேற்பிலும் சாதனை படைத்திருக்கிறோம். மிக விரைவில், 100 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் என்ற சாதனையை பெறுவோம்.
ஜனநாயகத்தில் கேள்வி எழுப்புவது சரிதான். ஓட்டு மிஷின்கள், வாக்காளர் பட்டியல்கள் குறித்த சந்தேகங்களும் அப்படித்தான். வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும் ஒவ்வொரு கட்டத்திலும், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும், தேர்தல் துறையுடன் தொடர்பில் இருக்கின்றனர்.
முழு தகவல் வெளியான பின் ஆட்சேபனைகளை தெரிவிக்க கட்சிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
ஒரு வாக்காளரை நீக்க அல்லது சேர்க்க கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஓட்டளிப்பவரை நேரில் விசாரிக்காமல் பட்டியலில் இருந்து நீக்கவே முடியாது.
ஓட்டுப்பதிவு நடப்பதற்கு, ஏழு அல்லது எட்டு நாட்களுக்கு முன்புதான் ஓட்டு மிஷின்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் வேட்பாளர்களுக்கு அவர்களின் முகவர்கள் வாயிலாக அதுகுறித்த தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
ஓட்டு மிஷின் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும், ஆதாரங்களும் இல்லை. இதில், செல்லாத ஓட்டு என்று எதுவும் இல்லை. மோசடிக்கும் சாத்தியம் இல்லை. ஹேக் செய்யவும் முடியாது. ஓட்டு மிஷின்களில் வைரஸை பரப்ப முடியாது.
இந்த தொழில்நுட்பம் நேர்மையான தேர்தலை உறுதி செய்கிறது. ஓட்டு மிஷின்கள் நம் தொழில்நுட்ப புரட்சியை பிரதிபலிக்கின்றன.
மிஷின்களில் முறைகேடு செய்ய முடியும் என்ற குற்றச்சாட்டு, பொய் என பல முறை நிராகரிக்கப்பட்டு உள்ளது. இனி, ஓட்டுச்சீட்டு முறைக்கு மாற முடியாது.
இதைத்தான் சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகள் திரும்பத் திரும்ப தீர்ப்புகளில் சொல்லிக்கொண்டு வருகின்றன. ஓட்டு இயந்திரங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை.
ஓட்டுச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பகிர்வது தொடர்பான விதிகளில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது. வாக்காளர்களின் தனிப்பட்ட உரிமையை பாதுகாக்கும் விதமாகவே இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு கமிஷனர் கூறினார்.