ஆர்கானிக் பொருட்கள் ஏற்றுமதிக்கு விதிகளை வெளியிட்டது மத்திய அரசு
புதுடில்லி:சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான
நடைமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளதாக, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம்
வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
இதுகுறித்து டி.ஜி.எப்.டி., எனப்படும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்திருப்பதாவது:
வருகிற 2030ம் ஆண்டுக்குள் ஆர்கானிக் உணவுப் பொருட்களுக்கான ஏற்றுமதியை 17,000 கோடி ரூபாயாக உயர்த்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. எனவே, சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான நடைமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி, என்.பி.ஓ.பி., எனப்படும் ஆர்கானிக் பொருட்களுக்கான தேசிய திட்டத்தின் கீழ்,
ஏற்றுமதிக்கு சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும்.
இந்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே, ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும். மேலும், என்.பி.ஓ.பி.,யில் குறிப்பிடப்பட்டுள்ள தரநிலைகளின்படி உற்பத்தி செய்து, பதப்படுத்தப்பட்டு, பேக் செய்யப்பட்டு மற்றும் லேபிள் இடப்பட்டால் மட்டுமே ஏற்றுமதிக்கு சான்று அளிக்கப்படும். திருத்தப்பட்ட இந்த நடைமுறைகள் இம்மாதம் 5ம் தேதியில் இருந்து 180 நாட்களில்
நடைமுறைக்கு வரும்.
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் ஒரு பிரிவான 'அபெடா' எனப்படும் விவசாயம் மற்றும்
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், நாட்டின் ஆர்கானிக் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு ஏற்ற வகையிலும், என்.பி.ஓ.பி., வின் விதிமுறைகளில் திருத்தங்களை கொண்டுவந்துள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி அதிகரிப்பு
நாட்டின் ஆர்கானிக் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி சீரான வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், 2012 - 13ல் 1,811 கோடி ரூபாயாக இருந்த ஆர்கானிக் பொருட்களின் ஏற்றுமதி, 2023 - 24ல் 4,206 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், கனடா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகள் ஆகியவை இந்திய ஆர்கானிக் பொருட்கள் ஏற்றுமதிக்கான முக்கிய நாடுகளாகும்.