ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு ஏ.சி.,யை 'சஸ்பெண்ட்' செய்ய கூட்டத்தில் வலியுறுத்தல்
ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு
ஏ.சி.,யை 'சஸ்பெண்ட்' செய்ய கூட்டத்தில் வலியுறுத்தல்
ஓசூர்,: 'ஓசூர் மாநகராட்சிக்கு, 100 கோடி ரூபாய்க்கு வருவாய் இழப்பு ஏற்பட காரணமான உதவி கமிஷனர் மற்றும் சிறப்பு வருவாய் ஆய்வாளரை, 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும்' என, மாநகராட்சி அவசர கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி அவசர கூட்டம், மேயர் சத்யா தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் ஸ்ரீகாந்த், துணை மேயர் ஆனந்தய்யா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மொத்தம், 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், நடந்த விவாதம் வருமாறு:மேயர் சத்யா: ஓசூர் மாநகராட்சியில், 2.26 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் பணிகள், 8.60 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகளை செப்பனிடுதல், கல்வெட்டுகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 5 கோடி ரூபாய் அளவிற்கு வளர்ச்சி பணிகள் செய்யப்பட
உள்ளன.
தி.மு.க., கவுன்சிலர் மாதேஸ்வரன்: வணிக வளாகங்களின் மின் இணைப்பு பட்டியலை, மின்வாரியத்தில் கேட்டு பெற்றதை போல், தொழிற்சாலை
களுக்கான இணைப்பு பட்டியலை கேட்டு பெற்றிருந்தால், பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படாமல் தடுத்திருக்கலாம். அதை ஏன் மாநகராட்சி நிர்வாகம் செய்யவில்லை. ஓசூர் பஸ் ஸ்டாண்டில், பஸ்களுக்கு நுழைவு கட்டண வசூல் ஏலம் எடுத்தவர், அதற்கான தொகையை மாநகராட்சிக்கு செலுத்தவில்லை. கடந்த, 6 மாதமாக பஸ்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்காமல் உள்ளார். இதனால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் ஏன், நேரடியாக நுழைவு கட்டணத்தை வசூலிக்கவில்லை. 'சிட்டிசன்' சினிமாவில் வருவது போல், ஓசூர் மாநகராட்சியிலுள்ள அனுமேப்பள்ளி அக்ரஹாரமே மாயமாகி உள்ளது. அங்குள்ள, 300 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு கடந்த, 14 ஆண்டுகளாக வரி விதிக்காமல், 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான சிறப்பு வருவாய் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் உதவி கமிஷனர் டிட்டோவை, 'சஸ்பெண்ட்' செய்திருக்க வேண்டும். தகுதியில்லாத சுரேஷை சிறப்பு வருவாய் ஆய்வாளராக நியமித்துள்ளனர். 35 ஆண்டுகளாக மாநகராட்சியில் பணியாற்றும் அவர், தொழிற்சாலை பக்கமே செல்வதில்லை. சொத்து வரி விதிக்க சொன்னால், பல லட்சம் செலவாகும் எனக்கூறி, எங்களை கவனி என கேட்கின்றனர். கமிஷனர் நல்லவராக இருப்பதால், அவரை ஏமாற்றுகின்றனர். இதை கமிஷனர் வேடிக்கை பார்க்கக்கூடாது.
கமிஷனர் ஸ்ரீகாந்த்: சிறப்பு வருவாய் ஆய்வாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கிறோம். பஸ் ஸ்டாண்ட் பஸ் நுழைவு கட்டணம் வசூலுக்கு, நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., சென்னீரப்பா: 3,200 சதுர அடி உள்ள கட்டடத்திற்கு, 32,000 சதுர அடி இருப்பதாக அளவீடு செய்து சொத்து வரி விதித்துள்ளனர். அங்கன்வாடி மைய பணி முடிந்து பயன்பாட்டிற்கு வருவதற்குள், கட்டடத்தில் தண்ணீர் கசிகிறது. ஒப்பந்ததாரர்கள், 10 சதவீதம் லாபம் இருந்தால் போதும் என இல்லாமல், 70 சதவீதம் லாபம் வேண்டும் என, தரமில்லாமல் பணி செய்கின்றனர்.
கமிஷனர் ஸ்ரீகாந்த்: கூடுதலாக சதுர அடி அளவீடு செய்துள்ளதா என பார்த்து நடவடிக்கை எடுக்கிறோம். அங்கன்வாடி மையத்தை பார்வையிடுகிறோம்.
இவ்வாறு, விவாதங்கள் நடந்தன.அதேபோல், கவுன்சிலர்கள் ஜெயப்பிரகாஷ், சிவராம், இந்திராணி, ஸ்ரீதர், அசோகா, பாக்கியலட்சுமி, முருகம்மாள், கிருஷ்ணப்பா உட்பட பலர், அடிப்படை வசதிகள் கேட்டு பேசினர்.