பயன்பாடின்றி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அரைக்கும் இயந்திரம்
பயன்பாடின்றி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அரைக்கும் இயந்திரம்
கரூர்,:பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் இயந்திரம் பயன்பாடின்றி கிடக்கிறது.
கரூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி துறை சார்பில், 157 பஞ்சாயத்துகளில் குப்பை இல்லாத, துாய்மையான சுகாதாரமான கிராமங்களாக மாற்றும் முயற்சியில், கவின்மிகு கரூர் திட்டம் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக, கரூர் வெள்ளியணை பஞ்.,ல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், மின்கல வாகனம் மூலம் திடக்கழிவு குப்பை சேகரிக்கப்படும். அந்த வாகனத்தில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக சேகரித்து, அதை சரியாக தரம் பிரித்து, அதனை தனி இடத்தில் குழி அமைத்து குப்பையை சேகரித்து வைக்கும் பணிகள்மேற்கொள்ளப்பட்டன. மக்காத பிளாஸ்டிக் கழிவு பொருட்களை, இயந்திரம் மூலம் அரைத்து சாலை பணிகளுக்கும் மற்றும் அதிலிருந்து சீருடைகள் தயாரித்து பயன்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, வெள்ளியணை பஞ்., அலுவலகம் அருகில் உள்ள கட்டடத்தில், பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அரைக்கும் இயந்திரம் நிறுவப்பட்டது. மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம், பிளாஸ்டிக் கழிவுகள் அரைக்கப்பட்டு, அது மறுசுழற்சி முறையில் சாலை அமைத்தல் உள்பட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. சில மாதங்கள் மட்டுமே பிளாஸ்டிக் இயந்திரம் செயல்பட்டது. நாளடைவில் பயன்படுத்தாமல் விட்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிளாஸ்டிக் கழிவுகளை, மறு சுழற்சி செய்யும் இயந்திரத்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.