பொங்கல் கொண்டாட்டம்... ஆயத்தமாகும் மக்கள்!
திருப்பூர்; பொங்கல் பண்டிகைக்கு இன்னும், ஐந்து நாட்களே உள்ள நிலையில், மாநகரில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்த மாநகர போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.
தொழிலாளர் நகரான திருப்பூரில், தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை தினங்களில் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வர். இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும், ஐந்து நாட்களே உள்ளது. இம்முறை பொங்கல் பண்டிகைக்கு அடுத்தடுத்து நாட்கள், சனி, ஞாயிறு என, ஒரு வாரத்துக்கு விடுமுறை உள்ளது. இதனால், சொந்த ஊருக்கு செல்ல மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
இச்சூழலில், பொங்கல் பண்டிகையொட்டி நாளை இரவு முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து துறை, போலீசார், மாநகராட்சி உள்ளிட்ட துறையினர் கலந்து ஆலோசித்து வருகின்றனர். மக்கள் எவ்வித சிரமம் இல்லாமல் பயணம் செய்ய அனைத்தையும் திட்டமிட்டு வருகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கமிஷனர், துணை கமிஷனர், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்ய உள்ளார்.
தயார் நிலையில் போலீசார்
நாளை வைகுண்ட ஏகாதசி, பின் திருவாதிரை, பொங்கல் பண்டிகை என, அடுத்தடுத்து வரிசையாக பண்டிகைகள் வருவதால் கோவில்களுக்கு மக்கள் அதிக வரக்கூடும். இதனால், வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாளை சொர்க்க வாசல் திறக்க உள்ள நிலையில் வீரராகவபெருமாள் கோவில் உள்ளிட்ட இடங்களில், நுாற்றுக்கணக்கான போலீசார் பணி அமர்த்தப்பட உள்ளனர். இதுதவிர, மாநகராட்சி சார்பில், நொய்யல் கரையில், 501 பெண்கள் பங்கேற்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடப்பதால், அப்பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
போலீஸ் கமிஷனர் ஆய்வு
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட, புதிய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழி பஸ் ஸ்டாண்டுகளில் நேற்று காலை ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அந்தந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், உதவி கமிஷனர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, நொய்யல் கரையோரம், 501 பொங்கல் வைக்கப்பட உள்ளது. நிகழ்ச்சி நடக்க உள்ள இடத்தையும் கமிஷனர் பார்வையிட்டார். குடியிருப்பு பகுதிகளில் வழக்கமான ரோந்தை காட்டிலும், கூடுதல் ரோந்து செல்லவும் அறிவுறுத்தினார்.