சிறப்பு பஸ் இயக்கம் நாளை இரவு முதல் துவக்கம்;  502 'டிரிப்' இயக்க முடிவு

திருப்பூர்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு நாளை இரவு முதல் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும், 12 மற்றும், 13ம் தேதி கூடுதல் பஸ் இயக்கப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், திருப்பூரில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ் இயக்கம் குறித்து திருப்பூர் மண்டல போக்குவரத்து அதிகாரிகள் ஆலோசித்துள்ளனர்.

இது குறித்து, போக்குவரத்து கழக திருப்பூர் மண்டலம் வெளியிட்ட அறிக்கை:

திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஈரோடு, சேலம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு, 209 வழக்கமாக 'டிரிப்'களுடன், 112 சிறப்பு 'டிரிப்' பஸ்கள் இயங்கும். புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, 137 வழக்கமான 'டிரிப்'களுடன், கூடுதலாக, 167 'டிரிப்' இயங்கும். மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், திருச்செந்துார் உள்ளிட்ட ஊர்களுக்கு, 231 வழக்கமான 'டிரிப்'களுடன், 223 சிறப்பு 'டிரிப்'களுடன், சிறப்பு பஸ்கள் கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து இயங்கும். மொத்தம், 577 பஸ்களுடன் கூடுதலாக, 502 சிறப்பு 'டிரிப்' பஸ்கள் இயங்கவுள்ளது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யலாம்



சென்னையில் இருந்து திருப்பூர் திரும்புவோர் வசதிக்காக நாளை (10ம் தேதி) இரவு முதல், 13 ம் தேதி வரை தினமும், ஐந்து முதல், பத்து பஸ்கள் சென்னைக்கு இயக்கப்படும். பஸ்களில் பயணிக்க விரும்புவோர் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. tnstc official app அல்லது www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். மத்திய பஸ் ஸ்டாண்ட்டில் டிக்கெட் முன்பதிவு மையமும் செயல்படுகிறது. விரைந்து செல்பவர்கள் தங்களுக்கான இருக்கையை உறுதி செய்து கொள்ள முடியும்.

தொடர் கண்காணிப்புக் குழு



திருப்பூர் மண்டல மேலாளர் (பொது) சிவக்குமார் கூறியதாவது:

கூட்ட நெரிசலை சமாளிப்பதற்கு ஏற்ற வகையில் சிறப்பு பஸ் இயக்கம் திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமான பஸ்களில் வசூலிக்கப்படும் கட்டணமே சிறப்பு பஸ்களிலும் வசூலிக்கப்படும்.

ஒரே நேரத்தில் பயணிகள் பஸ் ஸ்டாண்ட் வந்து சேராமல், முன்கூட்டியே வந்து விட்டால், எளிதில் சிறப்பு பஸ்களை அனுப்பி வைக்க முடியும். கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும், 12 மற்றும், 13ம் தேதி சிறப்பு பஸ் சூழலுக்கு ஏற்ப அதிகரிக்கப்படும்.

பஸ் ஸ்டாண்டில் சிறப்பு இயக்கம், நேர மேலாண்மை, புறப்பாடுகளை கவனிக்க துணை மேலாளர் (பொது), உதவி மேலாளர் (தொழில்நுட்பம்) உள்ளிட்டோர் தலைமையில், தலா, 25 பேர் கொண்ட மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பில் ஈடுபடுவர்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement