கார் மீது லாரி மோதல் 2 பேர் பலி; ஒருவர் காயம்

திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன், 40, செல்வராஜ், 45; திண்டுக்கல் கள்ளிமந்தயத்தை சேர்ந்த பிரதீப், 35. மூவரும் நண்பர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் தொழில் நிமித்தமாக, மூன்று பேரும் காரில் பொள்ளாச்சி சென்றனர். பின், இரவு தாராபுரம் திரும்பி கொண்டிருந்தனர்.

பொள்ளாச்சி - தாராபுரம் ரோடு நாரணாபுரம் அருகே வந்த போது, அவ்வழியாக, கரூரில் இருந்து சிமென்ட் லோடு ஏற்றி கொண்டு கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது.

விபத்தில், ராஜேந்திரன் மற்றும் பிரதீப் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தனர். காயமடைந்த செல்வராஜை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த ராஜேந்திரன், நகை வியாபாரம் மற்றும் வங்கியில் நகை மதிப்பீட்டாளராகவும் வேலை செய்து வந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement