மாற்றுத்திறனாளிக்கு ஸ்கூட்டர்; 60 பேரிடம் நேர்காணல் முகாம்

திருப்பூர்; கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில், ஸ்கூட்டருக்காக விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நேர்காணல் துவங்கியுள்ளது. கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த் ராம்குமார் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 60 பேர் பங்கேற்றனர்.

இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் நிறுத்தப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளிகளால் ஸ்கூட்டரில் ஏறி அமர முடிகிறதா; அவர்களால் ஓட்ட முடியுமா என பரிசோதிக்கப்பட்டது. இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டருக்கான நேர்காணல், இன்றும் நடைபெறுகிறது.

ஆய்வாளர் 'ஆப்சென்ட்'



இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டருக்கான நேர்காணல், வட்டார போக்குவரத்து ஆய்வாளர், மருத்துவர், தன்னார்வலர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும். மாற்றுத்திறனாளியால் டூவீலரை திறம்பட ஓட்ட முடியுமா, லைசென்ஸ் பெற தகுதியுள்ளவரா என்பதை ஆய்வு செய்யும் மிக முக்கியமான பொறுப்பு, போக்குவரத்து ஆய்வாளருக்கு உள்ளது.

ஆனால், திருப்பூரில் நேற்று நடத்தப்பட்ட நேர்காணலில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பங்கேற்கவில்லை. மருத்துவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினரே, பெயரளவுக்கு தேர்வு நடத்தி முடித்தனர். வரும் நாட்களிலாவது, உரிய அதிகாரிகள் இன்றி, தேர்வு நடத்துவதை தவிர்க்க வேண்டும்.

Advertisement