பல பேர் முன்னிலையில் பெண் ஊழியர் கொலை
புனே : புனேவில், 'கால் சென்டரில்' கணக்காளராக பணியாற்றிய சுபதா சங்கர் கோதரே, 28, என்ற பெண்ணை, உடன் பணியாற்றிய இளைஞர், நிறுவன வளாகத்தில் பல பேர் முன்னிலையில் வெட்டி சாய்த்த கொடூரம் நடந்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், புனேவின் ஏரவாடாவில் உள்ள பி.பி.ஓ., கால் சென்டரில் வேலை பார்த்தவர் சுபதா சங்கர் கோதரே.
இவருடன் கிருஷ்ண சத்ய நாராயண் கனோஜா என்பவர் பணியாற்றினார். இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்துள்ளது.
கிருஷ்ண சத்ய நாராயணிடம் தன் தந்தையின் மருத்துவச் செலவுக்காக எனக்கூறி, சுபதா கடந்த இரண்டு ஆண்டுகளில் 4.5 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அலுவலகத்தில் சுபதாவை சந்தித்த கிருஷ்ண சத்யநாராயண், தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். இது தொடர்பாக, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது.
அதன்பின் சுபதா, மாலையில் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு செல்ல வண்டியை எடுப்பதற்காக பார்க்கிங் பகுதிக்கு சென்றார். அவரை பின்தொடர்ந்து சென்ற கிருஷ்ண சத்யநாராயண், மறைத்து வைத்திருந்த இறைச்சி வெட்டும் கத்தியால் சுபதாவை தாக்கினார். இதில், அவருக்கு கையில் வெட்டு விழுந்தது.
நிலைகுலைந்து தரையில் விழுந்த அவர், தன்னை விட்டு விடும்படி கிருஷ்ண சத்யநாராயணிடம் கெஞ்சினார்.
ஆனாலும் மனமிரங்காத கிருஷ்ண சத்யநாராயண், கத்தியால் அவர் கழுத்தை வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சுபதா சரிந்தார்.
அந்த சமயத்தில் அப்பகுதியில் ஆண்கள், பெண்கள் என பலர் கூடியிருந்தனர்.
சிலர் இந்த சம்பவத்தை மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். சுபதாவை வெட்டிய பின், கிருஷ்ண சத்யநாராயண் கத்தியை துாக்கி வீசினார்.
அதன்பின் அவரை மடக்கிப் பிடித்த சக ஊழியர்கள், சரமாரியாக அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுபதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் கொலை வழக்கு பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.