பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்க கூட முடியாத அரசு

அருப்புக்கோட்டை: மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய்வழங்க கூட முடியாத அரசாக தி.மு.க., அரசு உள்ளது என, அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார். .

அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க., விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை சார்பில் யார் அந்த சார் வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கூறியதாவது:

தற்போது அ.தி.மு.க., விற்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகிக்கொண்டே செல்கிறது. சட்டசபையில் அ.தி.மு.க., எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தி.மு.க., அரசு திணறுகிறது.

அண்ணா பல்கலை மாணவி பலாத்கார வழக்கில் குற்றவாளியாக இருக்கக்கூடிய ஞானசேகரன்தி.மு.க., தொண்டர் என ஆர்.எஸ். பாரதி ஒரு பக்கம் சொன்னாலும், இன்னொரு பக்கம் சட்ட சபையில் முதல்வர் ஸ்டாலின் ஞானசேகரன் கட்சியின் உறுப்பினர் அல்ல ஆதரவாளர் என்கிறார்.

குற்றவாளியை தப்பிக்க வைக்கும் முயற்சியில் இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. யார் அந்த சார் என்ற அந்த குற்றவாளியை அரசு கண்டுபிடிக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க., வின் கோரிக்கை.

அ.தி.மு.க. ஆட்சியில் அரசால் பொங்கல் பரிசாக ரூ. 2500 வழங்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு தி.மு.க. அரசு பொங்கல் பரிசாக ஆயிரம்ரூபாய் வழங்க கூட முடியாத அரசாக உள்ளது. பணம் தரவில்லை என மத்திய அரசை குற்றம் சாட்டுகின்றனர், என்றார்.

Advertisement