அதிகாரிகளின் சொத்து விவரத்தை ஆராய உத்தரவு: சட்டவிரோதமாக மண் அள்ளிய விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி
சென்னை: கோவையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சட்டவிரோதமாக மண் அள்ளிய விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ள சென்னை ஐகோர்ட், கடந்த நான்கு ஆண்டுகளில் இப்பகுதியில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் போலீசாரின் சொத்து விவரத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளது.
கோவையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சட்டவிரோதமாக மண் அள்ளிய விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
கண்துடைப்பு
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் கூறியதாவது: கண்துடைப்புக்காக சிலரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், 3 சாக்கு பைகளில் செம்மண் வைத்து இருந்தாலே போலீசார் வழக்குப்பதிவு செய்கின்றனர். எந்த வீட்டு முன்பாவது ஒரு யூனிட் மணல் கொட்டி வைத்து இருந்தால், வி.ஏ.ஓ.,( கிராம நிர்வாக அலுவலர்), கவுன்சிலர், பஞ்சாயத்து அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று விடுகின்றனர். இவர்களின் கண்களுக்கு தெரியாமல், சிறிதளவு மணலை கூட கொண்டு செல்ல முடியாது.
ஒரு மணி நேரம் ஆகாது
குறைந்தபட்சம் 2 லட்சம் யூனிட் மணல் சட்டவிரோதமாக அள்ளப்பட்டு ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம், கொண்டு செல்லப்பட்டு உள்ளது. அதில் பல நிலங்கள் பட்டா நிலங்கள். அந்த நிலத்தின் உரிமையாளர் யார் என கேட்டால், குழந்தை கூட சொல்லிவிடும். எந்த காரணத்திற்காக, மணலை தோண்டினார்கள் என கண்டுபிடிக்க போலீசாருக்கு ஒரு நிமிடம் கூட ஆகாது. ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினாலே, இவ்வளவு மண் எங்கிருந்து எடுக்கப்பட்டது. காணாமல் போன மலைகள் மற்றும் மலைக்குன்றுகள் எங்கு மறைந்துள்ளன என்பதை கண்டுபிடிக்க முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
அலட்சியம்
பேரூர் பகுதியில் வளர்ச்சியடைந்த பகுதி. சிசிடிவி கேமரா உள்ளது. விசாரணைக்கு ஆன்லைன் மூலம் மாவட்ட எஸ்.பி., நேரில் ஆஜர் ஆனாலும், மணல் எங்கு போனது என போலீசாரால் சொல்ல முடியவில்லை. இன்று வரை மணல் எடுத்தது யார், என்ன காரணத்திற்கு எந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது ஒரு வழக்கைக் கூட பதிவு செய்ய முடியவில்லை. இதுவரை எந்த விசாரணையும் நடக்கவில்லை. விசாரணை நடத்தியதாக காட்டப்பட்டது அனைத்தும் வெறும் கண்துடைப்பு. உயர் அதிகாரிகள் வாய்மூடி மவுனமாக உள்ளனர். கீழ்மட்ட அதிகாரிகள் அலட்சியமாக காணப்படுகின்றனர். எனவே கீழ்நிலை அதிகாரிகள் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பிரச்னையா
நீதிமன்றம் எச்சரித்த போதும், இந்த பகுதிகளில் திட்டமிட்டு மண் அள்ளப்பட்டது குறித்து எந்த விசாரணையும் நடக்கவில்லை. இது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களினால் மட்டும் சாத்தியம் ஆகும். அங்கு சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டமைக்கப்பட்டு உள்ளன. அதிகளவு மணலை கொண்டு செல்ல ஏராளமான ஜேசிபிக்கள் மற்றும் வாகனங்கள் தேவைப்படும். அந்த வாகனங்களையும், அது எங்கிருந்து வந்தது, அதன் உரிமையாளர் யார் என்பதையும கண்டறிவதில் எந்த பிரச்னையும் இருக்காது.
சிறப்பு புலனாய்வு குழு
லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் அல்லது ஒன்றிரண்டு லாரி உரிமையாளர்கள் மட்டும் குற்றவாளிகள் என்பதற்காக, இந்த வழக்கை மூடிவிடக்கூடாது.இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள், முன்பணம் கொடுத்தவர்கள், மண் வெட்டி எடுப்பதற்கு ஆட்களை கொண்டு வந்தவர்கள், இந்த மண் யாருக்கு வழங்கப்பட்டது, இந்த மணலை பெற்றவர்கள் அனைவரும் விசாரணை செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு சட்டவிரோத மண் திருட்டு பல கோடிகளுக்கு நடப்பதாக தெரிகிறது. மேலும், இது மிகப்பெரிய அளவில் உள்ளது. இதனால், அனைத்து வழக்குகளையும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றுவது அவசியம்.
இந்த சிறப்பு புலனாய்வு குழுவில்,
மாநில குற்றப்பிரிவு எஸ்.பி., நாகஜோதி
ஒருங்கிணைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பி., சசாங்க் சாய் ஆகியோர் இடம்பெறுவார்கள்.விசாரணை குழுவிற்கு தேவையான அதிகாரிகளை அவர்கள் தேர்வு செய்யலாம். இதற்கு டிஜிபி., அனுமதி அளித்து அந்த அதிகாரிகளை அனுப்பிவைக்க வேண்டும்.
புது வழக்கு
இந்த குழுவினர் பழைய வழக்குகளை விசாரிப்பதுடன், டுரோன் மூலம் ஆய்வு செய்தும், விசாரணை மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து புதிதாக வழக்குகளை பதிவு செய்யலாம். அதிகாரிகள், மணல் மாபியாக்கள் மீது வழக்குப்பதிவு செய்வது என்பது சிறப்பு புலனாய்வு குழுவின் முடிவுக்கு உட்பட்டது. மணல் திருட்டில் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றம் உள்ளதா அல்லது இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் பெரிய மீன்களை கண்டுபிடிக்க வேண்டும். இந்த மணலை பெற்றவர்கள், அதன் மூலம் கல்லூரி, கல்வி நிறுவனங்களை கட்டிய பில்டர்கள் யார் என்பதை கண்டறியும் வரை விசாரணை தொடர வேண்டும். விசாரணை குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அறிக்கை
இந்த பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளில், பணியாற்றிய வருவாய்த்துறை அதிகாரிகள், விஏஓ., வருவாய் ஆய்வாளர், தாசில்தார், துணை தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்களின் சொத்து விவரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சஸ்பெண்ட்
தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் வி.ஏ.ஓ., ஆகியோர் இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்தால், அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கையோ அல்லது இடமாறுதல் நடவடிக்கை மேற்கொள்வது பற்றி கலெக்டர் முடிவு செய்யலாம். அவசியம் எனில், வேறு மாவட்டத்திற்கு கூட இடமாறுதல் செய்யலாம். அதேபோல, போலீஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு இருந்தால், கோவை சரக டி.ஐ.ஜி., உரிய விசாரணை நடத்தி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். சுரங்கத்துறை ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டர் விரிவான விசாரணை நடத்தி தவறு இழைத்த வருவாய் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்து உள்ளனர்.