டில்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் விமானம், ரயில் சேவை பாதிப்பு
புதுடில்லி : டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் நிலவியதால், 150க்கும் மேற்பட்ட விமானங்கள், 26 ரயில்கள் நேற்று தாமதமாக இயக்கப்பட்டன.
டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. அப்பகுதியில், நேற்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்ஷியஸாக பதிவானது.
இதன் காரணமாக, டில்லியில், விமானம் மற்றும் ரயில் சேவைகள் நேற்றும் பாதிக்கப்பட்டு, 150க்கும் மேற்பட்ட விமானங்களும், 26 ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், பயணியர் அவதிக்குஉள்ளாகினர்.
டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணியர், அந்தந்த விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு விமானம் புறப்படும் நேரத்தை உறுதிசெய்து கொள்ளும்படி, டில்லி விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்திஉள்ளது.
இதேபோல், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதனால், டில்லி - லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் பகதுார்கர் என்ற பகுதியில் ஒன்றன்பின் ஒன்றாக சென்ற கார்கள், அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின. இதில், ஏழு கார்கள் சேதமடைந்தன; சிலர் காயமடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உத்தர பிரதேசத்தின் பாலியா - லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில், டிரைவர் மற்றும் கண்டக்டர் பலியாகினர்.