ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக புகார் பேச்சுவார்த்தை தோல்வி
அன்னுார் : வடக்கலூரை சேர்ந்த சுந்தரம் என்பவர், கோவை கலெக்டர் அலுவலகத்திற்கும், தமிழக முதல்வருக்கும் அனுப்பிய புகாரில், 'காதல் திருமணத்தால் 12 குடும்பத்தினர் ஊரில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளோம். கன்னிமார் கருப்பராயன் கோவில் விழாவுக்கு அழைப்பதில்லை. எங்களது வீட்டு அசுப, சுப காரியங்களுக்கு மற்றவர்கள் வருவதில்லை. ஒதுக்கி வைத்துள்ளனர்,' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொங்கல் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திருவிழாவுக்கு தங்களை அழைக்கவில்லை. வரி வசூலிக்கவில்லை. எங்களை புறக்கணிக்கின்றனர். இதை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக சுந்தரம் தரப்பினர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். இதையடுத்து நேற்றுமுன்தினம் அன்னுார் தாசில்தார் குமரி ஆனந்தன், துணை தாசில்தார் தெய்வ பாண்டியம்மாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், எஸ்.ஐ., குமார் உள்ளிட்டோர் வடக்கலூர், கன்னிமார் கருப்பராயன் கோவில் வளாகத்தில் பேச்சு நடத்தினர்.
அப்போது சுந்தரம் தரப்பினர், 'எங்கள் தரப்பைச் சேர்ந்த 12 குடும்பங்களை ஒதுக்கி வைத்துள்ளனர். ஊர் கூட்டத்தில் மன்னிப்பு கேட்டு அபராதம் செலுத்தும்படி கூறுகின்றனர்' என்றனர். எதிர் தரப்பைச் சேர்ந்தவர்கள் பேசுகையில், 'ஆண்டாண்டு காலமாக எங்கள் ஊரில் பின்பற்றப்படும் கட்டுப்பாடுகளுக்கு அவர்கள் ஒத்துழைக்க மறுக்கின்றனர்,' என்றனர்.
வருவாய் துறை மற்றும் போலீசார் நீண்ட நேரம் அறிவுறுத்தியும் இரு தரப்பினரும் தங்கள் நிலையில் உறுதியாக இருந்ததால் 3 மணி நேரத்திற்கு பிறகு எந்த முடிவும் எட்டப்படாமல் அமைதிப் பேச்சு கூட்டம் தோல்வியில் முடிந்தது. 'மீண்டும் ஓரிரு நாட்களில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும்,' என அதிகாரிகள் தெரிவித்தனர்.