பன்றிகளை கொல்ல விவசாயிகள் கோரிக்கை தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை
பெ.நா.பாளையம்; கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கை:
வன எல்லையில் இருந்து, 3 கி.மீ., துாரத்துக்கு வெளியே வனத்துறையினர் காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதி என, அரசு அறிவித்துள்ளது. இதுவரை காட்டு பன்றிகளால், கொடுமைகள் அனுபவித்த விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இது சரியான தீர்வாக தெரியவில்லை.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டம் உட்பட, 10 மாவட்டங்களில் காட்டுப்பன்றிகள் சுட்டுக் கொல்ல வனத்துறையினருக்கு அனுமதி கொடுத்து சட்டம் வந்தபோது, ஒரு மாவட்டத்திலும், ஒரு பன்றியை கூட வனத்துறையினர் சுட்டுக் கொல்லவில்லை.
வன எல்லையில் இருந்து, 3 கி.மீ., துாரம் வரை காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்லக் கூடாது என்ற நிபந்தனை அதிர்ச்சியாக உள்ளது.
வனத்துக்கு வெளியே அபரிமிதமாக பெருகிவிட்ட காட்டுப் பன்றிகளை, வனத்துறையினர் மட்டுமல்லாமல், விவசாயிகளும், கொல்ல அரசு அனுமதிக்க வேண்டும்.
மூன்று மாதத்துக்குள் காட்டுப்பன்றி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படாமல் தொடர்ந்து கொண்டிருந்தால், விவசாயிகளையும், பொதுமக்களையும் ஒன்று திரட்டி மாநிலம் தழுவிய காட்டுப்பன்றி ஒழிப்பு மாநாடு நடத்தி, விவசாயிகளோடு, விவசாய சங்கமும் ஒன்று சேர்ந்து வனத்துக்கு வெளியே காட்டுப் பன்றிகளை கொன்று தீர்வு காணும்.
இவ்வாறு வேணுகோபால் கூறியுள்ளார்.