4 குழந்தைகள் பெற்றால் 1 லட்சம் பரிசு: ம.பி.,யில் சலுகை

17

போபால்:"நான்கு குழந்தைகளைப் பெற முடிவு செய்யும் இளம் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்," என்று பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவர் கூறினார்.

பண்டிட் விஷ்ணு ரஜோரியா பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவராக உள்ளார். மாநில அமைச்சருக்கு நிகரான பதவி வகிக்கிறார்.


ம.பி., மாநிலம் போபாலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பண்டிட் விஷ்ணு ரஜோரியா பேசுகையில், "நாம் நமது குடும்பங்களில் கவனம் செலுத்துவதை நிறுத்தி விட்டதால் மதவெறி பிடித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பெரியவர்களிடமிருந்து நாம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. இளைஞர்களிடமிருந்து எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. கவனமாகக் கேளுங்கள், எதிர்கால தலைமுறையின் பாதுகாப்பிற்கு நீங்கள் பொறுப்பு. குறைந்தது நான்கு குழந்தைகளைப் பெற்று கொள்ளுமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன்," என்றார்.

மேலும் அவர் கூறுகையில், நான்கு குழந்தைகளைக் கொண்ட தம்பதிகளுக்கு பரசுராம் வாரியம் ரூ.1 லட்சம் பரிசு வழங்கும். நான் வாரியத் தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், விருது வழங்கப்படும். கல்விக்கான செலவு தற்போது அதிகமாக உள்ளதாக இளைஞர்கள் அடிக்கடி கூறுகின்றனர்.

எப்படியாவது சமாளித்துக்கொள்ளுங்கள், ஆனால் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் பின்வாங்காதீர்கள். இல்லையெனில், மதவெறியர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றுவார்கள். இவ்வாறு பண்டிட் விஷ்ணு ரஜோரியா பேசினார்.

Advertisement