மேலுார் தொகுதிக்கு குறி வைக்கும் காம்ரேட்கள்!
நாயர் கடையில் ஆஜரான பெரியவர்கள், பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பெரியசாமி அண்ணாச்சி எடுத்து வந்திருந்த சர்க்கரை பொங்கலை ருசித்தபடியே, ''ஒரே துறையில ரெண்டு விதமா செயல்படுறாங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு, பண்ணை கழிவுகள்ல இருந்து உரம் தயாரிக்க, 'வெர்மி கம்போஸ்ட் பெட்' எனப்படும் உபகரணத்தை மானிய விலையில் வழங்குறாங்க... ஒரு விவசாயிக்கு தலா இரண்டு உபகரணங்களை, மானியம் போக, 3,650 ரூபாய்க்கு குடுக்கிறாங்க...
''ஆனா, இதே கம்போஸ்ட் பெட்டை தோட்டக்கலை துறை சார்பில், முழு மானியத்துல, அதாவது இலவசமாகவே விவசாயிகளுக்கு குடுத்துடுறாங்க... அதே மாதிரி, 'இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும்' திட்டத்தின் கீழ், வேளாண் துறை சார்பில் மண்வெட்டி, கடப்பாரை, இரும்பு சட்டி உள்ளிட்ட தொகுப்புக்கு மானியம் போக 1,535 ரூபாய் வசூலிக்கிறாங்க...
''தோட்டக்கலை துறையில இதை இலவசமாகவே தராங்க... ஒரே துறையில, இப்படி குளறுபடியா திட்டங்களை செயல்படுத்துறதால, விவசாயிகள் விரக்தியில இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''சிலையை அகற்ற போறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''தமிழகத்துல, 1970 மற்றும் 80கள்ல பிரபலமா இருந்தவர், விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு... விவசாயிகள் நலனுக்காக பல போராட்டங்களை நடத்தினாரு பா...
''தமிழகத்துலயே பெரம்பலுார்ல மட்டும் தான் இவருக்கு சிலை இருக்கு... கடந்த டிச., 31ல் நடந்த பெரம்பலுார் நகராட்சி கூட்டத்துல, இந்த சிலை போக்கு வரத்துக்கு இடையூறாகவும், விபத்து அதிகம் நடக்க காரணமா இருக்குன்னும் சொல்லி, அதை அகற்ற தீர்மானம் போட்டிருக்காங்க பா...
ஆனா, 'பெரம்பலுார்பஸ் ஸ்டாண்ட் வெளியே, முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை பிரமாண்டமா அமைக்க தி.மு.க.,வினர் முடிவு பண்ணியிருக்காங்க... அதுக்காகவே, நாராயணசாமி நாயுடு சிலையை அகற்றி வேற இடத்துல வைக்க பார்க்கிறாங்க'ன்னு விவசாயிகள் புகார் வாசிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
மேலுார் தொகுதிக்கு குறி வச்சிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மதுரை, மேலுார் தான வே...'' என, சந்தேகம் கேட்டார் அண்ணாச்சி.
''ஆமா... வர்ற சட்டசபை தேர்தல்ல, மேலுார் தொகுதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி குறி வச்சிருக்கு... மதுரை மாவட்டத்துல இருக்கற, 10 தொகுதியில ஒண்ணை மார்க்சிஸ்டுக்கு ஒதுக்க தி.மு.க., முடிவு பண்ணா, அது திருப்பரங்குன்றமா தான்இருக்குமாம் ஓய்...
''ஆனா, அந்த சட்டசபை தொகுதியைச் சேர்ந்த, மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி., வெங்கடேசன், இரண்டு முறை எம்.பி.,யா இருந்தும், தொகுதிக்கு உருப்படியா எந்த திட்டத்தையும் கொண்டு வரல... இதனால, அவர் மேல திருப்பரங்குன்றம் மக்கள் கடும் அதிருப்தியில இருக்கா ஓய்...
''அதுவும் இல்லாம, மாநகர தி.மு.க., செயலர் தளபதியும் இந்த தொகுதியில தான் வசிக்கறார்... இவருக்கும், வெங்கடேசனுக்கும்எப்பவும் ஏழாம் பொருத்தம் ஓய்...
''இதை எல்லாம் கூட்டி கழிச்சு பார்த்த மார்க்சிஸ்ட் கட்சியினர், மேலுார் தொகுதியை கேட்க முடிவு பண்ணியிருக்கா... 'அதுக்காகவே, இந்த பகுதியில டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான போராட்டங்கள்ல முன்ன நின்னு குடைச்சல் குடுத்துண்டு இருக்கா'ன்னு தி.மு.க.,வினர் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.