மும்பைக்கே ராஜாவானாலும்...!
மும்பை: கடந்த 2008ல் உலகை உலுக்கிய மும்பை தீவிரவாத சம்பவத்தை யாராலும் மறக்கமுடியாது. இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த தீவிரவாதி அஜ்மல்கான், மும்பை ரயில் நிலையத்தில் இயந்திர துப்பாக்கியால் பலரையும் சுட்டு வீழ்த்தியபடி சென்றார்.
அப்படிச் சுட்டுக் கொன்று கொண்டே சென்றவர் திரும்பி வந்து சுடுவாரா. இவருக்கு பின்னால் இன்னும் யாரேனும் தீவிரவாதி சுட்டுக்கொண்டே வருகின்றனரா என்பது தெரியாத திக் திக்கென்ற பீதி படர்ந்த சூழ்நிலை. இதன் காரணமாக குண்டடிபட்டவர்கள் உயிருக்கு போராடியும் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. ரத்த சகதியில் மிதந்தபடி தம்மைக் காப்பாற்ற பெருங்குரலெடுத்து அழைத்து அழுதனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அங்கு இருந்த ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் 'லக்கேஜ்' கொண்டு செல்லப்பயன்படும் தள்ளுவண்டியில் அடிபட்டவர்களை மீட்டு எடுத்துக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தார்.
அப்படி அவர் கொண்டு போய்ச் சேர்த்ததன் மூலம் உயிர்பிழைத்தவர்கள் மட்டும் 36 பேர் தன் உயிரைப் பொருட்படுத்தாமல் பிறர் உயிரைக்காப்பாற்றியவர் யார் அவர்தான் தமிழ்ச்செல்வன்!
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே கிராமத்தில் பிறந்தவர், 11ம் வகுப்பு வரை படித்தவர். குடும்ப ஏழ்மையை போக்க துபாய் போய் வேலை பார்க்க முனைந்தார்; ஒரு தரகரிடம் பணம் கொடுத்தார். அந்த தரகர் தமிழ்ச்செல்வனை மும்பை விமான நிலையம் வரை அழைத்து சென்று அங்கேயே 'அம்போ' என விட்டு சென்றுவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தமிழ்ச்செல்வன், ஊரில் கடன் வாங்கி தன்னை அனுப்பிய பெற்றோர் வேதனைப்படுவர் என்பதால், எந்த இடத்தில் ஏமாந்தமோ அந்த இடத்திலேயே வாழ்ந்து காட்ட முடிவு செய்தார்.
ரயில்வேயில் கூலி தொழிலாளியாக பணியாற்றினார், அங்கு படிப்படியாக முன்னேறி பார்சல் சர்வீஸ் காண்ட்ராக்டராக மாறினார். அந்த சூழ்நிலையில்தான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட அப்பாவி உயிர்களை காப்பாற்றினார். இந்த சம்பவத்திற்காக தமிழ்ச்செல்வனை நேரில் அழைத்துப் பாராட்டி 'கேப்டன்' பட்டம் கொடுத்து கவுரவித்தார் மகாராஷ்டிர கவர்னர்.
சாதாரண தமிழ்ச் செல்வன் கேப்டன் தமிழ்ச்செல்வனானார். இனி தன் உழைப்பு மக்களுக்கே என முடிவு செய்தார். எல்லா தரப்பு மக்களுக்கும் இவர் செய்த சேவை காரணமாக மாநகராட்சி கவுன்சிலரானார்.
2014 சட்டசபை தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக, அதிக தமிழர்கள் வசிக்கும் தாராவியை உள்ளடக்கிய கோலி, சியான்வாடா தொகுதியில் களம் இறக்கப்பட்டார்; வெற்றி பெற்றார். தனக்கு உதவியாளர் கூட வைத்துக் கொள்ளாமல் தன்னைத் தேடி வரும் மக்களுக்கு உடனுக்குடன் உதவி செய்து, கட்சியிலும் ஆட்சியிலும் மக்களிடமும் செல்வாக்கு பெற்றார்.
அடுத்து 2019, 2024 தேர்தலிலும் அமோக வெற்றி. 2024ல் இவரை வெற்றி பெறவைக்கக்கூடாது என்று, இண்டியா கூட்டணி சார்பாக இவரை எதிர்த்து கணேஷ்குமார் என்ற தமிழரையே காங்.,வேட்பாளராக போட்டியிட வைத்தனர்.
இது குறித்து தமிழ்ச்செல்வன் கூறுகையில், இந்த தொகுதியில் நிறைய தமிழர்கள் இருப்பதால்தான் நான் ஜெயிப்பதாக கூறுகின்றனர், உண்மையில் இங்கே தமிழர்கள் மூன்றாவது இடத்தில்தான் இருக்கின்றனர். என்னை யாரும் தமிழன் என்று பார்ப்பது இல்லை. இங்குள்ள மராட்டியர்கள் அவர்களில் ஒருவராகத்தான் என்னைப் பார்க்கின்றனர். நானும் எம்.எல்.ஏ.,வுக்கான கடமையை சரிவரச் செய்துவருகிறேன்' என்றார்.
மும்பையில் 'ராஜாவாக' வசித்தாலும் தமிழ் மண்ணையும் மக்களையும் மறக்கவில்லை. சொந்த கிராமத்தில் இருக்கும் அம்மா உட்பட சொந்தங்களை அவ்வப்போது வந்து பார்த்துச் செல்வார்.
ஒட்டுமொத்த மராட்டிய மண்ணில் உள்ள தமிழர்களின் நலனுக்காக 'தமிழ்பவன்' என்ற கட்டடத்தை கட்டுவதற்கான முயற்சியில் முழுமூச்சாக இறங்கியுள்ளார். தமிழர்களின் பெருமையை மராட்டிய மண்ணில் உயர்த்தும் கேப்டன் தமிழ்ச்செல்வன் மென்மேலும் புகழ்பெறட்டும்.