இந்திய அணி இமாலய வெற்றி * மந்தனா, பிரதிகா சதம் விளாசல்
ராஜ்கோட்: அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 304 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.
இந்தியா வந்த அயர்லாந்து பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் இந்தியா வென்றது. மூன்றாவது, கடைசி போட்டி நேற்று ராஜ்கோட்டில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
இரண்டு சதம்
இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பிரதிகா அசத்தல் துவக்கம் தந்தனர். மந்தனா 70 பந்தில் சதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 233 ரன் சேர்த்த போது, மந்தனா (135 ரன், 80 பந்து, 7x6, 12x4) அவுட்டானார். சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்த பிரதிகா, ஒருநாள் அரங்கில் தனது முதல் சதம் கடந்தார்.
ரிச்சா கோஷ் 59, தேஜல் 28 ரன் எடுத்தனர். இந்திய பெண்கள் அணி ஒருநாள் அரங்கில் அதிகபட்சமாக 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 435 ரன் குவித்தது. ஜெமிமா (4), தீப்தி (11) அவுட்டாகாமல் இருந்தனர்.
தீப்தி அபாரம்
கடின இலக்கைத் துரத்திய அயர்லாந்து அணியின் ஆர்லா (36), சாரா (41) போராடினர். லியா 15 ரன்னில் கிளம்பினார். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் திரும்பினர். 31.4 ஓவரில் 131 ரன்னுக்கு சுருண்டு தோற்றது. இந்தியா சார்பில் தீப்தி 3, தனுஜா 2 விக்கெட் சாய்த்தனர்.
10
ஒருநாள் அரங்கில் அதிக சதம் அடித்த இந்திய வீராங்கனை வரிசையில் முதலிடத்தில் தொடர்கிறார் மந்தனா (10). மிதாலி (7), ஹர்மன்பிரீத் கவுர் (6) அடுத்து உள்ளனர்.
* சர்வதேச அரங்கில் மெக் லானிங் (15, ஆஸி.,), சுஜீக்கு (13, நியூசி.,) அடுத்து உள்ளார் மந்தனா.
70 பந்து
இந்திய ஒருநாள் அரங்கில் அதிவேக சதம் அடித்த வீராங்கனை ஆனார் மந்தனா. நேற்று இவர் 70 பந்தில் சதம் கடந்தார். இதற்கு முன் ஹர்மன்பிரீத் கவுர் 87 பந்தில் (2024, தெ.ஆப்.,) சதம் அடித்து இருந்தார்.
57
இந்திய அணி நேற்று 9 சிக்சர், 48 பவுண்டரி என மொத்தம் 57 முறை பந்தை எல்லைக்கு அனுப்பினர். பெண்கள் ஒருநாள் அரங்கில் இது மூன்றாவது சிறந்தது ஆனது. முதல் இரு இடத்தில் நியூசிலாந்து அணப (71 முறை, 59 முறை, எதிர்-அயர்லாந்து) உள்ளது.
* இந்திய அணி ஒரு போட்டியில் அதிக சிக்சர் (9) நேற்று பதிவு செய்தது. முன்னதாக 2024ல் 8 சிக்சர் (தெ.ஆப்.) அடித்து இருந்தது.
வித்தியாசம் '304'
அயர்லாந்தை 304 ரன்னில் வீழ்த்திய இந்திய பெண்கள் அணி, ஒருநாள் அரங்கில், ரன் அடிப்படையில் தனது மிகப்பெரிய வெற்றியை நேற்று பதிவு செய்தது. இதற்கு முன் 249 ரன்னில் (2017, அயர்லாந்து) வென்றதே அதிகம்.
435 ரன்
மூன்றாவது போட்டியில் 435 ரன் குவித்த இந்திய பெண்கள் அணி, ஒருநாள் அரங்கில் முதன் முறையாக 400 ரன்னுக்கும் மேல் எடுத்தது. முன்னதாக கடந்த 12ல் 371/5 ரன் (எதிர்-அயர்லாந்து) எடுத்திருந்தது. தவிர, இம்மைல்கல்லை எட்டிய முதல் ஆசிய பெண்கள் அணியானது.
* இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் (435) இது. ஆண்கள் அணி 2011ல் 418 ரன் (எதிர்-வெ.இண்டீஸ், 2011) எடுத்ததே அதிகம்.
* பெண்களுக்கான ஒருநாள் அரங்கில் நியூசிலாந்து (4 முறை), ஆஸ்திரேலியாவுக்கு (1) அடுத்து 400 ரன் என்ற மைல்கல்லை எட்டிய 3வது அணியானது இந்தியா.
444 ரன்
தனது முதல் 6 போட்டியில் அதிக ரன் (444) குவித்த வீராங்கனை என சாதனை படைத்தார் இந்தியாவின் பிரதிகா. இங்கிலாந்தின் சார்லொட்டீ (434) அடுத்து உள்ளார். ஆண்கள் அரங்கில் தென் ஆப்ரிக்காவின் ஜானேமன் மலான், 483 ரன் குவித்தது முதலிடத்தில் உள்ளது.
* ஒருநாள் போட்டியில் 150 ரன்னுக்கும் எடுத்த மூன்றாவது இந்திய வீராங்கனை பிரதிகா (154). 2017ல் தீப்தி 188 (எதிர்-அயர்லாந்து), ஹர்மன்பிரீத் கவுர் 171 (ஆஸி.,) எடுத்துள்ளனர்.
இரண்டு சதம்
இந்திய அணியின் துவக்க வீராங்கனைகள் (மந்தனா, பிரதிகா) சதம் விளாசிய நிகழ்வு நேற்று மூன்றாவது முறையாக நடந்தது. இதற்கு முன் 1999ல் ரேஷ்மா (104), மிதாலி (114), 2017ல் தீப்தி (188), பூனம் (109) இதுபோல சதம் (எதிர்-அயர்லாந்து) விளாசினர்.
'ஜன. 15' ஸ்பெஷல்
இந்திய ஆண்கள் அணி ஒருநாள் அரங்கில் ரன் அடிப்படையில் (317 ரன்) மிகப்பெரிய வெற்றியை, கடந்த 2023, ஜன. 15ல் (எதிர்-இலங்கை) பெற்றது. தற்போது 2025, ஜன. 15ல் இந்திய பெண்கள் அணி, தனது இமாலய வெற்றியை (304 ரன் வித்தியாசம்) பதிவு செய்துள்ளது ஸ்பெஷல் தான்.