ம.பி.,யில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த காவலர் தலைமறைவு; யாருக்கு தொடர்பு என காங்., - பா.ஜ., மோதல்
போபால்: ம.பி.,யில் போக்குவரத்து துறையில் காவலர் ஆக பணிபுரிபவரிடம் இருந்து ரூ.11 கோடி அளவுக்கு சொத்து, 52 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் தலைமறைவான நிலையில், இது தொடர்பாக பா.ஜ., காங்கிரஸ் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.
ம.பி., மாநிலம் குவாலியரில் போக்குவரத்து துறையில் காவலர் ஆக பணிபுரிபவர் சவுரப் சர்மா. கடந்த 2015ல் அவரது தந்தை பணியில் இருந்த போது மரணம் அடைந்ததால், கருணை அடிப்படையில் இந்த வேலை அவருக்கு கிடைத்தது. கடந்த டிச., மாதம் லோக் ஆயுக்தா போலீசார் அவருக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.2.1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்தனர். மேலும் பைகள் நிறைய தங்கம் மற்றும் வெள்ளியை பறிமுதல் செய்தனர்.
அதே நாளில், இவரது உதவியாளர் பெயரில் பதிவான கார் ஒன்று வனப்பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் என்ற பெயர் பொறிக்கப்பட்டு இருந்த காரிலும் ரூ.9 கோடி பறிமுதல் ஆனது. பைகளில் இருந்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக போலீசார், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் பட்வாரி கூறியதாவது; ஷர்மாவின் வீட்டில் இருந்து டைரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் , ரூ.1,300 கோடி பணம் செக்போஸ்ட் மூலம் கைமாற்றப்பட்டது குறித்த தகவல்கள் உள்ளன. இது குறித்து லோக் ஆயுக்தா போலீசார், வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை மவுனம் காக்கின்றன. இதனால், விசாரணை தடைபட்டு உள்ளது. இந்த டைரிக்கு யாரும் பொறுப்பு ஏற்க மறுக்கிறார்கள்.
தலைமறைவாக உள்ள போக்குவரத்து காவலரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். டைரியில் 'TC', 'TM' எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அது போக்குவரத்து கமிஷனர், போக்குவரத்து அமைச்சர் என்பதை குறிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்துள்ள பா.ஜ.,வின் ஆஷிஸ் அகர்வால் கூறியதாவது: மாநில காங்கிரஸ் தலைவர், கமல்நாத் தலைமையிலான 15 மாத ஆட்சியை நினைவு பார்க்க வேண்டும். இது ஊழல் நிறைந்ததாக இருக்கும். தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக அவர் அறிக்கை கொடுக்கிறார். மத்தியிலும், மாநிலத்திலும் எங்கள் ஆட்சி உள்ளது. யார் தலைமையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்? ஊழலை எங்கள் அரசு சகித்துக் கொள்ளாது. யார் தவறு செய்தாலும் தப்பிவிட முடியாது. இதில் உள்ள தொடர்புகள் காங்கிரசை எட்டிவிடும் என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.