கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை இறப்பு: சி.பி.ஐ., விசாரணை கேட்டு தந்தை ஐகோர்ட்டில் மனு
சென்னை: '' விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் குழந்தை கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்தது குறித்து போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை. விசாரணையை சி.பி.ஐ., அல்லது சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற வேண்டும்,'' என அவரது தந்தை சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பழைய போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனிவேல்,34. இவரது மனைவி சிவசங்கரி,32. இவர்களது ஒரே மகள் லியா லட்சுமி,4. விக்கிரவாண்டி செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வந்தார். கடந்த 5ம் தேதி பகல் 12 மணிக்கு உணவு இடைவேளையின் போது சிறுவர்கள் வகுப்பறையில் இருந்து வெளியே விளையாடிவிட்டு, மீண்டும் வகுப்பறைக்கு சென்றனர். ஆசிரியர் ஏஞ்சல், சிறுமி லியா லட்சுமி இல்லாததால், பிற வகுப்பறைகளில் தேடினார். அங்கும் இல்லாததால், சிறுவர்கள் விளையாடிய இடத்தில் தேடியபோது, அருகில் இருந்த கழிவுநீர் தொட்டிக்குள் குழந்தை இறந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர் ஆகியோர் கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ளனர். இந்த மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது பெற்றோர் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பழனிவேல் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: குழந்தை இறப்பு குறித்து விக்கிரவாண்டி போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை. குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை. பள்ளியில் இருந்து 20 மீட்டரில் போலீஸ் ஸ்டேசன் இருந்தும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. குழந்தை மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளதால், விசாரணையை சி.பி.ஐ., அல்லது சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற வேண்டும் எனக்கூறியுள்ளார்.
இதனை விசாரித்த ஐகோர்ட், இந்த மனு குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசு, போலீசார் மற்றும் சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்.,4ம் தேதிக்கு ஒத்திவைத்தது.