'டல்லடித்த' மீன் மார்க்கெட்

திருப்பூர், : பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக, திருப்பூர் மீன் மார்க்கெட்டில், ஞாயிற்றுக்கிழமை விற்பனை இயல்புக்கு திரும்பவில்லை. மீன் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையத்தில் மீன் மார்க்கெட் உள்ளது. ஆந்திரா, கேரளா, தமிழக கடலோர மாவட்டங்களில் இருந்து, 55 முதல், 65 டன் கடல் மீன்கள், பவானிசாகர், திருமூர்த்தி, மேட்டூர் உள்ளிட்ட அணைகளில் இருந்து, 20 டன் டேம் மீன்கள் விற்பனைக்கு வரும். பொங்கல் பண்டிகை, தொடர்விடுமுறை காரணமாக கடந்த வாரம் விற்பனை குறைந்தது.

இந்நிலையில், ஞாயிறு விற்பனையை எதிர்பார்த்து நேற்று துவங்கிய மீன் மார்க்கெட்டில் அதிகாலை முதலே விற்பனை 'டல்'லாக இருந்தது. வழக்கமாக, 30 முதல், 40 டன் மீன்கள் காலை 10:00 மணிக்குள் விற்பனையாகும். மற்ற மீன்கள் மாலை வரை விற்கும். ஆனால், நேற்று காலையிலேயே மீன் விற்பனை மந்தமாக இருந்தது; மதியம் வரை, 25 டன் கடல் மீன், 10 டன் டேம் மீன் மட்டும் விற்றது.

மீன் வியாபாரிகள் சிலர் கூறியதாவது: பொங்கல் பண்டிகையால் மீனவர்கள் அதிகளவில் கடலுக்கு செல்லவில்லை. வழக்கத்தை விட கடல் மீன் வரத்து குறைந்தது; 30 டன் கடல் மீன் மட்டுமே வந்தது. டேம் மீன்களை மட்டுமே நம்பி விற்பனையை துவக்கினோம். ஆனால், அவற்றை வாங்கி செல்லவும் குறைந்தளவு வாடிக்கையாளர்களே வந்தனர். மீன்களை வாங்கிச் செல்லும் மொத்த வியாபாரிகளும் குறைவாகவே வந்தனர்.

திருப்பூரில் இருந்து பெரும்பாலானோர் வெளியூர் சென்று விட்டதால், மீன்வாங்க ஆளில்லை. இறைச்சி கடைகள் விடுமுறையால் கடந்த, 15 ம் தேதி மாட்டுப்பொங்கல் நாளில் இருந்த விற்பனை கூட இன்று (நேற்று) இல்லை. வரும் வாரத்தில் மீன் வரத்தும், விற்பனையும் முழுமையாக இருக்கும் என எதிர்பார்த்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement