கொப்பரை விலை உயர்வு; உற்பத்தியாளர் மகிழ்ச்சி

திருப்பூர் : கொப்பரை தேங்காய் விலை இது வரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. இதனால், கொப்பரை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பெருமளவு விவசாயிகள் தென்னை சாகுபடி செய்கின்றனர். தென்னை மரத்தில் ஆண்டுதோறும், 10 முறைக்கு குறையாமல் காய் பறிக்கப்படும். இதில், 30 நாள் தேங்காய் இளநீராகவும், 45 நாளுக்கு மேற்பட்டது தேங்காயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

காங்கயம் சுற்றுப்பகுதியில் தேங்காய் எண்ணெய் மில்கள் உள்ளன. பெரும்பாலான விவசாயிகள் அவர்களாகவே கொப்பரை உற்பத்தி செய்து ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திலும், வியாபாரிகளுக்கும் கொப்பரையை விற்பனை செய்கின்றனர்.

இதுதவிர, தற்போது ஏராளமான மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் பெருகி வரும் நிலையில், இவற்றுக்கும் கொப்பரை விற்பனைக்கு செல்கிறது.

கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக சபரிமலை சீசன் துவங்கிய காரணத்தால், தேங்காய்க்கு பெரும் கிராக்கி ஏற்பட்டது, மேலும், குளிர் காலம் துவங்கிய நிலையில், மரங்களில் காய்க்கும் தேங்காய்களின் அளவும் சிறிதாகியது. பண்டிகை காலம் என்பதால் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்க்கும் தேவை அதிகரித்தது.

தேங்காய் உற்பத்தி குறைவு என்பதோடு, தேவையும் அதிகரித்த காரணத்தால் இவற்றின் விலை உயர்ந்தது. அவ்வகையில், காங்கயம் மார்க்கெட் நிலவரத்தில் இவற்றின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. தேங்காய் ரகங்கள் விலை கிலோ 60 ரூபாய் வரை உயர்ந்தது.

பச்சை தேங்காய் டன் 60 ஆயிரம் ரூபாய்; கருப்பு தேங்காய் டன், 64 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்தது. அதேபோல் தேங்காய் எண்ணெய் 15 கிலோ கொண்ட டின் 3,200 ரூபாய் என அதிகரித்தது. தேங்காய் பவுடர் ஒரு கிலோ, 265 ரூபாயாக உயர்ந்தது.

மேலும் சாதா கொப்பரை இரண்டாம் தரம் கிலோ, 145 ரூபாய்; முதல் தரம் கிலோ, 152 ரூபாயாகவும் இது வரை இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.

கொப்பரைக்கு அதிகளவில் விலை கிடைத்த காரணத்தால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேங்காய் மற்றும் கொப்பரை விலை அதிகரித்துள்ள நிலையில், தேங்காய் எண்ணெய் விலையும் கடைகளில் அதிகரித்துள்ளது.

Advertisement