வாகன ஓட்டுநர்களை குழப்பும் வழிகாட்டி பலகை மாற்றியமைக்க கோரிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில், வாகன ஓட்டுநர்களை குழப்பும் வகையில், நெடுஞ்சாலைத் துறையால் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையை மாற்றியமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

பொள்ளாச்சி மார்க்கமாக, உடுமலை, கோவை, பாலக்காடு, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களுக்கான தேசியநெடுஞ்சாலை செல்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தச் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு, எச்சரிக்கை அறிவிப்புகள், வழிகாட்டிப் பலகைகள் வைக்கப்பட்டு சாலையின் தரமும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இத்துடன் அந்தந்தப்பகுதிகளில் உள்ள சுற்றுலா, கோயில் விபரங்கள் படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சாலையோரங்களில், ஊர்களுக்குச் செல்ல வழிகாட்டும் வகையில் பெயர் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில், பொள்ளாச்சி நகரின் மத்தியில், அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் வால்பாறை, ஆனைமலை மற்றும் கோவை செல்வதற்கான வழிகாட்டி பலகை, திசை, கி.மீ., ஆகியவற்றை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், திசை குறிப்பிட்ட வழித்தடம் ஒரு வழிப்பாதையாகவும், வணிகக்கடை நிறைந்து போக்குவரத்து நிறைந்த சாலையாகவும் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் திணறுகின்றனர்.

உடுமலை ரோட்டில் வரும் வாகன ஓட்டுநர்கள், வால்பாறை செல்ல முற்பட்டு, ஒரு வழிப்பாதையான கடைவீதிக்குள் நுழைய முற்படும்போது, நெரிசல் ஏற்படுகிறது.

வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும், சாலை குறியீடு குறித்த தகவல், வாகன ஓட்டுநர்களுக்கு புரியும் வகையில் இருக்க வேண்டும்.

வால்பாறைக்கு, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வந்து செல்லும் நிலையில், முறையான வழித்தடம் குறித்த அறிவிப்பை இடம்பெறச் செய்ய வேண்டும். அதேபோல, நகரில், ஒருவழி, இருவழி பாதைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நகரைச் சேர்ந்த பெரும்பாலான வாகன ஓட்டுநர்கள், ஒரு வழிப்பாதையில் சென்று திரும்புவதே போக்குவரத்து நெரிசலுக்கும் காரணமாக அமைகிறது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement