மழையால் சம்பா அறுவடை பணி பாதிப்பு: விவசாயிகள் கவலை
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு சுற்று வட்டாரத்தில் திடீரென பெய்த மழையால் சம்பா நெல் வயல்களில் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
சேத்தியாத்தோப்பு, புவனகிரி, கீரப்பாளையம், ஸ்ரீமுஷ்ணம், கம்மாபுரம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், குமராட்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் நடவு செய்துள்ளனர்.
நெல் அறுவடைக்கு தயாராகியுள்ள நிலையில் கடந்த இரண்டுநாட்களாக லேசான மழை பெய்ததால் அறுவடை இயந்திரத்தை வயலில் இறக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வெயில் காட்டினால் மட்டுமே அறுவடை இயந்திரங்கள் வயலில் இறங்கி அறுவடை செய்யமுடியும் என விவசாயிகள் தள்ளப்பட்டு கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த ஒரு வாரகாலமாக ஆங்காங்கே வழிப்பிரச்னை இல்லாத சாலையோரம் உள்ள வயல்களில் விவசாயிகள் அறுவடையை துவங்கியுள்ளனர்.
அறுவடை செய்துள்ள நெல்லை 63 கிலோ எடையுள்ள மூட்டை 1200ரூபாய் முதல் 1250 ரூபாய் வரைக்கும், 77 கிலோ மூட்டை 1400 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வியபாரிகள் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலையில் ஆரம்பித்த மழையால் பாதிக்கப்பட்டு அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.