கால்வாயில் கலக்கும் கழிவு, நிலத்தடி நீர் மாசு முள்ளுமாரியம்மன் கோவில் தெரு மக்கள் அவதி
விருதுநகர்: குடியிருப்பு பகுதியில் டவர் கட்டுமானம், நீர் வரத்து வாய்க்காலில் கழிவு நீர் கலப்பு என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சி முள்ளு மாரியம்மன் கோவில் தெரு மக்கள்.
விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சி பகுதியாக இருந்தும் நகர் பகுதிக்கு அருகே உள்ளது.
இதனால் நாளுக்கு நாள் குடியிருப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு பாண்டியன் நகர், ஜக்கதேவி நகர், காந்தி நகர், முள்ளுமாரியம்மன் கோவில் தெரு உள்பட பல பகுதிகள் உள்ளது.
இங்குள்ள முள்ளுமாரியம்மன் கோவில் தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் டவர் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது.
இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆனால் செல்போன் டவர் அமைப்பதற்காக தோண்டிய பள்ளத்தில் கனமழையின் போது மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுகிறது. இப்பகுதி வழியாக செல்லும் நீர்வரத்து கால்வாய் முழுவதும் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.
குல்லுார் சந்தை அணைக்கு தண்ணீர் கொண்டுச் செல்லும் கால்வாய் கழிவுநீர் கால்வாய் ஆக மாறிவிட்டது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் மாசடைந்து வருகிறது.