வாலிபர் கொலை வழக்கில் மேலும்இருவர் மீது பாய்ந்தது குண்டாஸ்
கரூர்: லாலாப்பேட்டை அருகே நடந்த, வாலிபர் கொலை வழக்கில் மேலும், இரண்டு பேர் குண்டர் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ், 36. இவர் கடந்தாண்டு டிச., 16ல், லாலாப்பேட்டை இரட்டை வாய்க்கால் அருகே, முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்டம், பண்ணைவயல் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார், 30, குளித்தலையை சேர்ந்த பூபாலன், 22, சண்முக வடிவேல், 23, ஆகியோரை லாலாப்பேட்டை போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அதில், ரஞ்சித் குமார் நேற்று முன்தினம் குண்டர் சட் டத்தின் கீழ், கைது செய்யப்பட்டார். மேலும், பூபாலன், சண்முக வடிவேல் ஆகிய, இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, கலெக்டர் தங்கவேல் உத்தரவிட்டார். பிறகு, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை, லாலாப்பேட்டை போலீசார் நேற்று, திருச்சி மத்திய சிறையில் உள்ள பூபாலன், சண்முக வடிவேல் ஆகியோரிடம் வழங்கினர்.