அரசு பஸ் ஊழியர்கள் 700 பேர் கைது
மதுரை: மதுரை அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன் சி.ஐ.டி.யூ., சார்பில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கும் தமிழக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் அழகர்சாமி தலைமை வகித்தார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே நடத்த வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அகவிலைப்படி உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 2023 ஏப்ரல் முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய கால பலன்களை வழங்க வேண்டும்.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும். போக்குவரத்து கடனை அடைத்து தொழிலாளர்களின் பணப் பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் தெய்வராஜ், செயலாளர் லெனின், துணைத் தலைவர் ராஜேந்திரன், அரசு போக்குவரத்து மாநில சம்மேளன உதவி தலைவர் பிச்சை, அரசு போக்குவரத்து மதுரை மண்டல தொழிலாளர் சங்கத் தலைவர் மாரியப்பன், அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யூ., ஓய்வு பெற்ற தொழிலாளர் நலச்சங்க தலைவர் அழகர், பொதுச் செயலாளர் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.