விருதுநகர் பள்ளி, கல்லுாரிக்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல்

விருதுநகர்:விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரிக்கு நேற்று காலை 8:15 மணிக்கு வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் வந்தது. போலீசுக்கு தகவல் தெரிவித்து, கல்லுாரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்கள், பேராசிரியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் கல்லுாரியில் சோதனை செய்தனர். வெடிகுண்டு கைப்பற்றப்படவில்லை.

கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கே.வி.எஸ்., ஆங்கிலப்பள்ளியில் நேற்று காலை 11:00 மணிக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை.

கடந்தாண்டு விருதுநகர் பெரிய பள்ளிவாசல் தெருவில் உள்ள சந்திரா நர்சரி பள்ளிக்கு நவ. 19ல் அலுவலக தொலைபேசி எண்ணிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விருதுநகர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்., சிதம்பர நாடார் ஆங்கிலப்பள்ளிக்கும் கடந்தாண்டு டிசம்பர் முதல் வாரத்தில் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. ஒரே இ-மெயில் முகவரியில் இருந்து இரண்டு இடங்களுக்கும் மிரட்டல் வந்துள்ளது. அதே இ-மெயில் முகவரியில் இருந்து தான் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என போலீசார் கூறினர்.

Advertisement