சுகாதாரம் இல்லாமல் அன்னதானம் வழங்கினால் ரூ.ஆயிரம் அபராதம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அனுமதி பெறாமல் சுகாதாரம் இல்லாத உணவுகளை அன்னதானமாக வழங்கினால் ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
பழநி முருகன் கோயிலில் சில நாட்களில் தைப்பூசத் திருவிழா நடக்கிறது. இதற்காக பல்வேறு மாவட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். செம்பட்டி, நத்தம், வேடசந்துார், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் பக்தர்களுக்காக ஆங்காங்கு ஏராளமானோர் உணவு சமைத்து அன்னதானம் வழங்குகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கலைவாணி தலைமையில் பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் அன்னதானம் வழங்கும் இடங்களில் ஆய்வு செய்தனர்.
சுகாதாரம் இல்லாத உணவுகளை வழங்க கூடாது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் உணவு வழங்கக் கூடாது. முறையாக அனுமதி பெற வேண்டும். தடை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது.
மீறினால் அன்னதான வழங்குவோருக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதை கண்காணிக்க சுழற்சி முறையில் உணவுத்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் கூறினர்.