பாரம்பரிய அறிவுமிக்கவர்கள் தமிழக ஸ்தபதிகள் தொல்லியல் அறிஞர் பாராட்டு

5

சென்னை; “தமிழக ஸ்தபதிகள், பாரம்பரிய தொழில்நுட்ப அறிவுடன் உள்ளனர்,” என, மத்திய தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி பேசினார்.

ஐ.சி.எச்.ஆர்., மற்றும் 'சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்' சார்பில், 'இந்திய வரலாறு, தொழில்நுட்பங்களில் பண்டைய மக்களின் அறிவு' என்ற இரண்டு நாள் கருத்தரங்கம் மற்றும் மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு படிகள் கண்காட்சி, சென்னை, தி.நகர் ஷசுன் மகளிர் கல்லுாரியில் துவங்கியது.


10ம் நுாற்றாண்டு





கண்காட்சியை, மத்திய தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளர் கே.கே.முகமது துவக்கி வைத்தார். தான் சீரமைத்த பாடேஷ்வரர் கோவில் பற்றி படங்களுடன் அவர் விளக்கியதாவது:

மத்திய பிரதேச மாநிலம் சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் முற்றிலும் இடிந்த, 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கோவில்களின் தொகுப்பை, பிரிட்டிஷார் கண்டறிந்தனர். அவ்விடத்தை, பாதுகாக்கப்பட்ட இடமாக மத்திய தொல்லியல் துறை 1920ல் அறிவித்தது.
ஆனால், ஊரிலிருந்து துரத்தப்பட்ட குஜ்ஜார் இனக் குழுவின் தலைவன் நிர்பய் சிங்கின் கீழ் அப்பகுதி இருந்தது. அவர் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், அப்பகுதி அவரின் மறைவிடமாக இருந்தது.

அதனால், பிறர் அப்பகுதிக்கு செல்ல துணியாததால், இடிந்த கோவிலின் பாகங்கள் பாதுகாப்பாக கிடந்தன. அதை சீரமைக்கும் பணியில், நான் ஈடுபட்டேன். கொள்ளை கூட்டத்தில் இருந்து சரணடைந்த லச்சு சிங் என்பவருடன் பேச்சு நடத்தி, அவர் முன்னோர்களான குஜ்ஜார் இனத்தினர் தான், அக்கோவிலை கட்டியதாக நம்ப வைத்தேன்.

தொடர்ந்து அதிபயங்கர குற்றச்செயல்களில் ஈடுபட்ட நிர்பய் சிங் உள்ளிட்டோரையும் தனதாக்கி, மற்ற கொள்ளைக்காரர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொண்டேன். அப்பகுதியில் இருந்த, 60க்கும் மேற்பட்ட கோவில்களை கண்டறிந்து சீரமைத்தேன்.முழுதும் கற்களால் கட்டப்பட்டதால், அது முடிந்தது. பல பாகங்களை ஒட்டு போட்டும், சில இழந்த பகுதிகளுக்கு மாற்றாக, புதிய பகுதிகளை செய்தும் சீரமைத்தோம். இதை, உள்ளூர் மக்களும், கொள்ளை கூட்டத்தால் பாதிக்கப்பட்ட மாநில அரசுகளும் பாராட்டின.

இந்திய கோவில்களை, படையெடுப்பின் வாயிலாக முஸ்லிம்கள் அழித்தனர் என்ற கறையை துடைக்க, ஆண்டவன் எனக்கு அளித்த வாய்ப்பாக அதை கருதுகிறேன். இதுபோல், பல கோவில்களை சீரமைத்துள்ளேன்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, ஒலிம்பிக் பிரபலங்களும் இந்தியா வந்தபோது, அப்பகுதிக்கு சென்றதால், உலக அளவில் பிரபலமாகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், தொல்லியல் அறிஞர் சத்தியமூர்த்தி பேசியதாவது:



தொல்லியல் துறை அறிஞர்கள் பழமையானவற்றை கண்டுபிடிப்பது, பாதுகாப்பது ஒருபுறம் இருந்தாலும், அந்தந்த பகுதிகளின் வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் போது தான், அவர்களே பாதுகாவலர்களாக மாறுவர். அதற்காகவே, 'ரீச் பவுண்டேஷன்' என்ற அமைப்பை துவக்கி பயிற்சி அளித்து வருகிறோம்.

வீடியோ ஆவணம்



காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில், மரங்கள் முளைத்ததால் இடிந்த நிலையில் இருந்த கைலாசநாதர் கோவிலை ஆராய்ந்தோம். தமிழக கட்டடக்கலை, மற்ற மாநிலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.அதாவது, ஒரு பகுதி இடிந்தாலோ, சிதைந்தாலோ, அப்பகுதியை மட்டும் சீரமைத்து விடலாம்.
அதனால், 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட முற்கால பல்லவர்கள், செங்கல், சுண்ணாம்பு சாந்தால் கட்டிய அந்த கோவிலை, அதே முறையில் சீரமைக்க தீர்மானித்து, முழுதுமாக புகைப்படம் மற்றும் வீடியோ ஆவணமாக்கினோம்.பின், செங்கல் அடுக்கி அதன் மீது, அரைத்த சுண்ணாம்பு, கடுக்காய் சாறு, புளித்த வெல்லக் கலவை உள்ளிட்ட கலவையால் பூசி சீரமைத்தோம்.

முழுதும் சிதைந்த பகுதிகளில் உறுதித்தன்மைக்காக கருங்கற்களை பயன்படுத்தி, செங்கல் - சுண்ணாம்பு கலவையால் வெளியில் சீரமைத்தோம்.மேலும், சிதைந்த சிலைப்பகுதிகளை போலவே, தற்போதைய ஸ்தபதிகளைக் கொண்டு செய்தோம். அதாவது, மற்ற மாநிலங்களில், பழைய மாதிரியைப்போல செய்ய, தற்போதுள்ள கலைஞர்களுக்குத் தெரியாது.

ஆனால், தமிழக ஸ்தபதிகளுக்கு பாரம்பரிய தொழில்நுட்ட அறிவு உள்ளதால், அப்படியே சிலைகள் உள்ளிட்ட அனைத்து கலை சார்ந்த வேலைகளையும் செய்கின்றனர்.அவர்களை அடையாளம் கண்டு, பழைய கோவில்களை புதுப்பிக்க, அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது, இளம் தலைமுறையினருக்கு பயிற்சியாகவும் அமையும்.



தொழில்நுட்பம்





மேலும், உடைந்த சிதைந்த கருங்கற்களை இணைக்க, சென்னை ஐ.ஐ.டி., கட்டட தொழில்நுட்ப பிரிவு பேராசிரியர் மாத்யூ, அதே மாதிரிகளை செய்து, துருபிடிக்காத இரும்பை சொருகி ஆராய்ந்தார். அதேபோல், இங்கேயும் செய்தோம். தற்போது 10 ஆண்டுகளை நெருங்கும் நிலையில், அக்கோவில் நல்ல நிலையில் உள்ளது.இதுபோல், விரிசல் அடைந்தோ, இடிந்தோ கிடக்கும் பழைய கோவில்களை அகற்றி, புதுக் கோவில் கட்டாமல், அதே கோவிலை சீரமைத்தால், பழமையும் வரலாறும் பிழைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மன்னர் பரம்பரை



நிகழ்வில், மைசூரு கல்வெட்டு பிரிவு இயக்குனர் முனிரத்தினம் பேசியதாவது:

மன்னர்களின் பரம்பரை, அவர்களின் ஆட்சி நிர்வாகம், மக்களின் நிலை உள்ளிட்டவற்றை அறிய, எழுதப்பட்ட ஆவணங்கள் தான் சான்றுகளாக உள்ளன.

அந்த வகையில் கல்வெட்டுகள், செப்பேடுகள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவற்றில் உள்ள எழுத்துகளின் வாயிலாக வரலாற்றை அறிகிறோம்.

மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில், மைசூரு பிரிவில், 74,000 கல்வெட்டு படிகளும், நாக்பூரில் 15,000 கல்வெட்டு படிகளும் உள்ளன. மைசூரு பிரிவில் இருந்த தமிழ்ப்படிகளில், 14,000 படிகள், சென்னைக்கு எடுத்து வரப்பட்டு விட்டன.நாட்டில் உள்ள அனைத்து கல்வெட்டு, செப்பேடு படிகளையும், 'டிஜிட்டல்' ஆவணமாக்கி வருகிறோம்.

விரைவில், அனைத்து மொழி ஆவணங்களையும், அந்தந்த மொழிகளிலும், ஆங்கிலத்திலும் அனைவரும் அறியும் வகையில் இணையதளத்தில் பதிவேற்ற, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளார். அது, விரைவில் நிறைவேறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், ஷசுன் கல்லுாரி முதல்வர் பத்மாவதி பங்கேற்றார்.

Advertisement