ஊரக உள்ளாட்சிகளில் வரி வசூலிக்கும் பணி தீவிரம்
இளையான்குடி : இளையான்குடி, மானாமதுரையில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நீண்ட வருடங்களாக வரியினங்கள் வசூலிக்கப்படாமல் இருந்தநிலையில் தற்போது அதனை தீவிரமாக வசூலிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜன.5ம் தேதியோடு நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சி பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தைச் சேர்ந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலாளர்கள் தனி அலுவலர்களாக நியமனம்செய்யப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்நிலையில் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 கிராம ஊராட்சிகளின் கீழ் 125க்கும் மேற்பட்ட கிராமங்களும், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 55 கிராம ஊராட்சியின் கீழ் 170க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. இந்த ஊராட்சிகளின் கீழ் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் சொத்து வரி,தொழில் வரி, குடிநீர் வரி என பல்வேறு வரியினங்கள் வசூல் செய்யப்பட்டு அரசுக்கு செலுத்தப்படுகின்றன. நகரப் பகுதிகளை ஒட்டியுள்ள ஊராட்சி அமைப்புகளுக்கு சொத்து வரி, தொழில்வரி மூலம் மற்ற ஊராட்சிகளை விட கூடுதல் வருமானம் கிடைத்து வந்தது.
இந்நிலையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர், ஒன்றியகவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய தலைவர் என மக்கள் பிரதிநிதிகள் பதவியில் இருந்த போது ஏராளமானோர் வரியினங்களை முறையாக செலுத்தாமல் இருந்து வந்தனர்.
மக்கள் பிரதிநிதிகளும் அடுத்த தேர்தல்களில் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக ஊராட்சி பணியாளர்கள் வரியினங்களை வசூல் செய்வதில்ஆர்வம் காட்டாமல் பார்த்துக்கொண்டனர். இந்நிலையில் கடந்த 5 ம் தேதி உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவு பெற்று தனி அலுவலர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததை தொடர்ந்து அவர்கள் தற்போது அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் நீண்ட வருடங்களாக வசூலிக்கப்படாமல் இருந்த வரியினங்களை வசூல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தனி அலுவலர்கள் கூறியதாவது:
ஏராளமான ஊராட்சிகளில் கடந்த சில வருடங்களாக வரியினங்கள் வசூலிக்கப்படாமல் இருந்ததால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி ஆதாரம் இல்லாமல் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது வசூலிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஓரளவிற்கு நிதி ஆதாரம் கூடுவதற்கு வாய்ப்புள்ளது என்றனர்.