'தோல் பொருட்கள் துறையில் 25 லட்சம் வேலைவாய்ப்புகள்'
சென்னை:''இந்திய காலணி மற்றும் தோல் பொருட்கள் துறையில் வரும் 2030க்குள், 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன,'' என, தோல் பொருட்கள் ஏற்றுமதி கவுன்சிலின் செயல் இயக்குனர் செல்வம்
தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இந்திய வர்த்தக மேம்பாட்டு துறை மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி கவுன்சில் சார்பில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், பிப்., 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை, இந்திய சர்வதேச தோல் மற்றும் தோல் பொருட்கள் கண்காட்சி நடைபெறுகிறது.
பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி நாடுகள் தனி அரங்குகளை அமைத்துள்ளன. மேலும், 17 நாடுகளிலிருந்து 61க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். தோல் பொருட்கள் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், அடுத்து இந்தியாவும் உள்ளன. சீனாவில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் வெளியேறுகின்றன. அந்நிறுவனங்கள், இந்தியாவில் தொழில் துவங்க ஆர்வம் காட்டுகின்றன.
தற்போது, இந்திய தோல் மற்றும் காலணி துறையின் சந்தை மதிப்பு, 2 லட்சம் கோடி ரூபாய். அதில், 40,000 கோடி ரூபாய் ஏற்றுமதியாகிறது; மீதி, உள்நாட்டு தேவை. இந்த துறையால், 44 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
வரும் 2030ல் சந்தை மதிப்பு, 4 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க உள்ளது. இதனால், கூடுதலாக 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். அதில், 60 சதவீதம் பெண்களுக்கு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.