'வரட்டா...!' பள்ளிக்கு கிளம்புது 'டாட்டா' சொல்லி
வெளிநாடுகளில் வேன் வந்து நின்றதும் வீட்டிலிருந்து டிரஸ் அணிந்தபடி, ஜாலியாக வெளியே வரும் பப்பி, உரிமையாளருக்கு 'கை கொடுத்துவிட்டு' அதில் ஏறி தன் இருக்கையில் அமர்ந்து கொள்ளும். வேன் முழுக்க, பப்பிகள் ஏறிய பிறகு, அவை ஸ்கூலுக்கு செல்வது போன்ற பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்த்திருப்பீர்கள். அக்கலாச்சாரம், இங்கும் வந்துவிட்டது.
பெங்களூரு, சர்ஜாபூரில், கிட்டத்தட்ட 2 ஏக்கர் பரப்பளவில், பிளப்பி பா'ஸ் பெட் ரெசார்ட் (Fluffy paws pet resort) என்ற பப்பிக்கான ஸ்கூல் செயல்படுகிறது.
அப்படி என்னத்தான் பப்பிக்கு சொல்லி கொடுப்பீர்கள் என்ற கேள்வியுடன், இதன் உரிமையாளர்கள் கண்ணன் மோகன் மற்றும் சுஹம் பால் ஆகியோரை தொடர்பு கொண்டோம்.
'செல்லமே' பக்கத்திற்காக நம்மிடம் பகிர்ந்தவை:
வெளிநாடுகளில் மட்டுமல்ல இந்தியாவிலும் செல்லப்பிராணியை குடும்ப உறுப்பினர் போலவே பலரும் வளர்க்கின்றனர். பப்பிகளுக்கு சில அடிப்படை பயிற்சிகள், ஒழுங்கு முறைகளை உருவாக்கி, அதனுள் இருக்கும் திறன்களை வெளிக்கொணரவும், அவை மகிழ்ச்சியான சூழலில் வளருவதை உறுதி செய்வதும் தான், பெட்ஸ் ஸ்கூலின் முக்கிய நோக்கமாகும்.
இங்கு சேரும் பப்பிகளின் தடுப்பூசி சான்றிதழ் உட்பட ஹெல்த் ரிப்போர்ட் பெறப்படும். ஒவ்வொரு நாளும் அதன் உடலில் ஏதேனும் உண்ணிகள் இருக்கிறதா என பரிசோதித்த பிறகே, உள்ளே அனுப்புவோம். பெங்களூரு போன்ற பெருநகரங்களில், பப்பி ஓடி, விளையாட வீட்டில் போதிய இடமிருக்காது. வேலைக்கு செல்ல வேண்டிய சூழலில், பப்பியை எங்கே விடுவது என்பதே முதல் கேள்வியாக முன்நிற்கும். இதற்காகவே, பப்பி ஸ்கூல் துவங்கினோம்.
இங்கே சந்தித்து கொள்ளும் பப்பிகள், மற்றவைகளுடன் நெருங்கி பழகும். ஓடி விளையாட, விளையாட்டு பூங்கா இருக்கிறது. நீச்சல் குளம் இருக்கிறது. பப்பிக்கான குரூமிங் சென்டர் இருப்பதால், அழகுப்படுத்துவதற்கென தனியாக நேரம் செலவிட வேண்டியதில்லை.
நில், நட, ஓடு, உட்கார், எதையும் எடுக்காதே, குரைக்காதே, கடிக்காதே போன்ற சில கட்டளைகளுக்கு கீழ்படிய, தினசரி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு, சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் வழிநடத்துவர். பயிற்சிக்கு பின் பப்பிகள் சுத்தம் செய்யப்படும். சொல்வதை புரிந்து கொண்டு செயல்படும் அளவிற்கு, பப்பிகளை பழக்குவதால், பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், அவை சமத்தாக நடந்து கொள்வதோடு, உரிமையாளருக்கு எந்த தொந்தரவும் தராது.
பப்பியை பராமரிக்க வேண்டிய வேலைப்பளு குறைவதால், அதிக நேரம் அவைகளுடன் விளையாட முடிவதாக, உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தினசரி உடல் திறனை செலவிடுவதால், அவை மகிழ்ச்சியான சூழலில் வளருவதை உறுதி செய்து கொள்ளலாம். ஒரே இடத்தில் கட்டி வைத்தால் மட்டுமே பப்பி அக்ரசிவ்வாக மாறும். இதுபோல, ஆக்டிவ்வாக இருந்தால், பப்பி ஆயுள் முழுக்க, ஆரோக்கியமாக இருக்கும்.
இங்கு பப்பிக்கான ஸ்கூல் மட்டுமல்லாமல், போர்டிங் வசதியும் இருக்கிறது. மியாவுக்கு தனி போர்டிங் வசதி உள்ளது. ரெசார்டில் கபே வசதி இருப்பதால், பப்பியுடன் வந்து நேரம் செலவிடலாம். எங்களின் ரெசார்ட்,பப்பிகளுக்கு இன்னொருவீடு போன்ற உணர்வை தரும்.